Pages

Search This Blog

Friday, December 07, 2018

Bhagavd gita stories


 உலகத்தின் இதயத்துடிப்பை எகிற வைத்துக்கொண்டிருக்கும் ஹாலிவுட் இன் பெவர்லி ஹில் வில்ஷையர் புலவார்டில்  பறந்து கொண்டிருந்தது ராஜனின் ஃபெராரி கார். லாஸ் ஏஞ்சலீஸின் வியாபார மையமான டவுன் டவுனிலிருந்து வீடு திரும்பிப் கொண்டிருந்தான்


வெறும்வீடு அல்ல அது. அவன் ஆசையுடனும் பெருமையுடனும் வாங்கிய பெரீய தோட்டமும் துரவுமான பங்களா. அந்த வீடு இப்போது கசந்தது அவனுக்கு

அவன் மனம் பத்து வருடங்கள் பின்னோக்கி வாயு வேகத்தில் போய்க்கொண்டிருந்தது


இந்தக் கனவுலக வாழ்க்கையை கற்பனை செய்யக்கூட தெரியாத காலம் அது. மத்யம வர்கத்திற்கு எடுத்துக்காட்டான குடும்பம். முன்னால்  இரண்டடி போனால் பின்னால் பத்தடி இழுக்கும் செலவுகளுக்கு இடையில் இவனால் எம் இல் எம் பி படிக்க முடிந்தது என்பது அவனுடைய உழைப்பினாலும் அறிவினாலும் மட்டுமே சாதித்தது.


கடவுள் ஒரேடியாக தூக்கி விட்டதில் இதோ இங்கு  லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இன்று கொடிகட்டி பறக்கும் வெகுசில வியாபார கன்ஸல்ட்டண்ட்களில் இவனும் ஒருவன்

சின்ன வயதிலிருந்து தர்மம்நியாயம் என்றும் அதுதான் நம்ப சொத்துடா என்றும் சொல்லி சொல்லி வளர்த்ததில் வம்பான விஷயங்களை கிட்ட நெருங்க விடமாட்டான்


ந்யூயார்க்கின் வால் ஸ்ட்ரீட்  இவனை வா வா என வருந்தி அழைக்கிறது. ஆனால் இந்த ஊரின் மிதமான வெப்பமும் அழகும் அவனை நகர விடவில்லை


 “கல்யாணம் பண்ணின்டு எங்க வேணா போடா. எங்க கடமைய செஞ்சுடறோம். அப்பறம் உன் பாடு. நாங்க நிம்மதியா இருப்போம்என்று பரிதாபமாக அம்மா கெஞ்சியதில் கொஞ்சமே கொஞ்சம் ஏமாந்து போய் லதாவின் அழகில் மயங்கி தாலி கட்டி கூட்டி வந்துவிட்டான்


ஹூம் என்ன மாயமோ?என்ன மாய்மாலமோ ?இந்தியாவில் பூனை மாதிரி இருந்தவள் இங்க வந்த ஒரே வருடத்தில் ஆளே மாறிப்போய் உடை மாறி நடைமாறி இதோ இந்த ரெண்டு மூணு வருஷமா நடத்தையும் மாறினாப்பலதான் இருக்கு .. சே ஒரு தமிழ் பொண்ணுமாதிரியா நடக்கறா? அசிங்கமா இருக்கு நினைக்கவே. அந்த மார்கோஸோ முட்டைகோஸோ அவன் என் கால் தூசி பெறுவானா? அவன் இன்னிக்கெல்லாம் சம்பாதிச்சா மாசம் ஆறாயிரம் டாலர் கூட தாண்டாது. அவனைப்போய்... “ குமட்டிக்கொண்டு வந்தது ராஜனுக்கு


இன்னிக்கு ஒரு முடிவா கேட்டுடறேன். ரொம்ப எகிறினா மூட்டை கட்டி ஊருக்கு அனுப்பிட வேண்டியதுதான்” 

க்ரீச் .... தன்னிச்சையாக கார்,ஸிக்னலில் நின்றது

மனமே அடங்கு... அமைதி அமைதி ...” 


ஏக்கர் கணக்கில் விரிந்திருந்த தனது வீட்டினுள் நுழையும்போதே மனம் முன்னங்கால்கள் தூக்கியபடி பிளிரும் அடங்காத குதிரையைப் போல கறுவியது

லதா ஐயம் ஹோம்ஆர் யூ தேர்

அவனுடைய கேள்வி அந்த வீட்டின் நிசப்தத்தில் கரைந்து போனது 


மெல்ல பெட்ரூமில் கேட்ட சப்தம் அவனின் சர்வ நாடியையும் கோபத்தில் எகிற வைத்தது

லதா..... என்ன பண்ணின்டு இருக்கே. உனக்கென்ன பைத்தியமா? சீ முதல்ல வெளிய வா.. “ 

ராஜனின் கத்தல் வீட்டையே உலுக்கிய போது சலனமே இல்லாமல் உள்ளிருந்து வந்த லதா 

ஒய் ஆர் யு ஷௌட்டிங்? நான் என்ன வீட்டை விட்டு ஓடியா போய்ட்டேன். ?


ஹேய் உள்ள யாரு? உனக்கு வெட்கமில்லையா? இப்பவே உன்னையும் அவனையும் என்ன பண்றேன் பாருவெளிய வாடா வெக்கங் கெட்டவனே.. 

நீயெல்லாம் மனுஷனாடா? சூடு சொரணை இல்ல?

ஏய் எங்கடீ அவன்


பதில் சொல்லாமல் அவள் வெறித்த அந்த விநாடி ஏதோ ஒரு பேய் அவனுள்ளே புகுந்து அவனை ஆட்டுவித்ததைப்போல சரேலென்று தனது துப்பாக்கியை எடுத்து லதாவை சுட்டே விட்டான்

 அவளின் சரியும் உடலைப் பார்த்த நிமிடம் அவனைப் பிடித்த பேய் விலகியது போல இருந்தது


என்ன காரியம் செஞ்சுட்டேன்?கோபத்தில் நான் மிருகமாயிட்டேனா? ஹையோ இது என்ன? அவளைப் பேசக்கூட விடலையே.. கொஞ்சம் யோசித்திருக்கலாமே..அம்மா போனமுறை கூட படிச்சு படிச்சு சொன்னாளே

டேய் லதா நல்ல பொண்ணுடா. ஏதோ கொஞ்சம் அந்த ஊர் வாழ்க்கை  திடீர்னு வந்த புதையல் மாதிரி அவளை அலக்கழிக்கறது. விட்டுப்புடிடா. ஒரு கொழந்தைய பெத்துக்கோ எல்லாம் சரியாயிடும்னாளே....ராஜன் புலம்பியதைக் கேட்க அந்தப் பெரிய வீட்டில் ஒரு காக்கா கூட இல்லை


லதாவின் ரத்தம் உறையும் முன்னே

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் போலீஸ் ராஜனை விலங்கிட்டு அழைத்து சென்றுவிட்டது


இதோ லாஸ் ஏஞ்சலீஸ் ஜெயிலில் வெறித்துப் பார்த்துக் கொண்டு தனக்குத்தானே சிரித்துக் கொண்டிருக்கும் இந்த ராஜனை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா


லதாவிற்கு எந்த மார்கோஸையும் முட்டைக்கோஸையும்்தெரியாது அவள் நடத்தையிலும் எந்த கறையும் இல்லை என்பது தெரிய வந்ததிலிருந்து இப்படித்தான் சிரிக்கிறான்


Chapter 3 verse 36

அர்ஜுன உவாச

அத கேன ப்ரயுக்தோயம் பாபம் சரதி பூருஷ:

அநிச்சன்னபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜயதி


(எல்லாம் தெரிந்தும்) எது மனிதனை தான் நினைக்காவிட்டாலும் ஏதோ ஒரு சக்தி பிடித்து தள்ளுவதைப்போல பாபம் செய்யத்தூண்டுகிறது?


ஶ்ரீ பகவான் உவாச


காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ குண சமுத்பவ

மஹாசனோ மஹா பாப்மா வித்யேனம் இஹ வைரிணம் 


ரஜோ குணத்தில் உதித்த காமம்( ஆசை) அதனால் உண்டாகும் க்ரோதம் இவை இரண்டும் பெருத்த பசியுடைய மஹா பாபிகள். இவையே எல்லா பாபங்களுக்கும் மூல காரணங்கள்அவையே இவ்வுலகில் ஒருவனுக்கு மிகப்பெரிய எதிரிகள் என்று அறி. அர்ஜுனா








No comments: