Pages

Search This Blog

Thursday, May 18, 2023

போஸ்ட் போடலையோ போஸ்ட்

போஸ்ட் போடலையோ போஸ்ட். 
By 
Rajineel Neelakant 

ஏம்மா கொஞ்சம் இங்க வரியா?

 என்ன காலங்காத்தால என்ன கூப்பிடுறீங்க?
 
 இல்ல மத்தியமர்ல எழுதுவதற்கு ஏதாவது ஒரு கரு இருந்தா சொல்லு..
 
 என்னமோ கடையில கத்திரிக்காய் வாங்குற மாதிரி கேக்குறீங்க .
 
 கடையில வாங்கறதுனா அப்பவே வாங்கி முடிச்சிருப்பேனே. உன்கிட்ட ஏன் கேட்கிறேன்.. கொஞ்சம் யோசிச்சு சொல்லு..
 
 என்னமோ.. என்னத்த சொல்றது சரி. இப்பதான் எல்லாரும் மாமியார் மருமகள் அது இதும்னு எழுதறாங்களே. அது மாதிரி ஏதாவது எழுதுங்கோ.
 
 மாமியாராவது மருமகளாவது நம்ப வீட்டுல ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒரு பொண்ணு. அது கல்யாணம் ஆகி போயிடுச்சு. நான் எங்க போறது மாமியார் மருமகளுக்கு. நீ உன் மாமியாரோட இருந்தத வேணும்னா எழுதறேன்.
 
 ஏன் என் மாமியார் கூட எனக்கு என்ன? நல்லாத்தானே வச்சிருந்தேன் கடைசி வரைக்கும்.
 
 அப்படின்னு நீ சொல்ற ஆனா உலகம் என்ன சொல்லுது?
 
 அது சரி. உலகம் ஆயிரம் பேசும். நான் எப்படி வெச்சிருந்தேன் எங்க மாமியாரைன்னு எனக்கும் தெரியும். உங்க அம்மாக்கும் தெரியும். உங்க அம்மாவுக்கு வேணா என்னை பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனா நான் அப்படி இல்லை. நான் யாருக்கும் ப்ரூவ் பண்ண வேண்டியதும் இல்லை..ம்க்கும்..
என்ன வம்புக்கு இழுக்கலனா உங்களுக்கு ஆகாதே..

சரி சரி அத வுடும்மா. வேற... ஐடியா?

ஏதோ அந்த கோயில் இந்த கோவிலுக்கு எல்லாம் போய் சிலை எல்லாம் தன்னோட பேசுதுன்னு யாரோ அழகழகா எழுதுறாங்களே. அது மாதிரி ஏதாவது கோயில் பற்றி எழுதுங்க.

சரியா போச்சு. கோயிலுக்கு போனா சாமியே என்ன பாக்க மாட்டேங்குது. இதுல கோயில்ல இருக்கிற சிலையா என்ன பாத்து பேசப் போவுது. கொஞ்ச நஞ்ச சிரிப்பையும் விட்டுட்டு உன்னை மாதிரி தோள்ல இடிச்சுக்கிட்டு வேற பக்கம் மூஞ்சியை திருப்பிக்குது. அதெல்லாம் நமக்கு வராதுமா வேற ஏதாவது சொல்லு. 

வேற என்ன ...ஏதாவது சமையல் குறிப்பு எழுதுங்க. 

சமையல் குறிப்பா!! நீ செய்யற சமையல பத்தி குறிப்பு எழுதினால் என்னைய மத்தியமர்ல இருந்து தூக்கிடு வாங்க..

 அதானே பார்த்தேன் திரும்பவும் என்கிட்ட தானே வம்புக்கு வருவீங்க. ஏன் நான் சமைக்கிற சமையலுக்கு என்ன குறைச்சல்? பல்லி மாதிரி இருந்த உடம்பு இப்போ யானை மாதிரி ஆயிருக்கே அதுக்கு யார் காரணம் உங்க அம்மாவா பண்ணாங்க? நான் தான் உங்களை நாற்பது வருஷமா வளர்த்துக்கிட்டு வரேன்..

எங்க அம்மா என்ன ஆரோக்கியமா வச்சிருந்தாங்க. நீ பண்ண சமையல ஒவ்வொரு நாளும் ஒரு lab எலி மாதிரி எனக்கு போட்டு போட்டு நாக்கும் செத்துப் போச்சு. உடம்பும் பெருத்து போச்சு. அதை விடு இப்ப அதை பத்தி பேசி என்ன புண்ணியம் ? வேற ஏதாவது ஐடியா சொல்லு.

ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் என் சமையல புகழ்ந்தாலும் வீட்டில இருக்கிற உங்களை என்னால திருப்தி படுத்த முடியாது. சரி இத பத்தி இப்ப என்ன? 
 ஏதாவது கை வேலை கிய் வேலை தெரிஞ்சா அதைப்பற்றி ஏதாவது எழுதுங்க. எல்லாரும் நான் அதைப் பண்ணேன் இதப் பண்ணேன். பொம்மை.. பையி அப்படின்னு போடுறாங்களே. பெயிண்டிங் பண்ணறது , யாரு முகத்தயாவது வரையறது அப்படி அது மாதிரி எதையானு போட்டு வையுங்க .

!!? பெயிண்டிங்காவது படமாவது ?ஏன்மா என்ன பாத்தா எப்படி இருக்கு? ஒரு பென்சில் கூட என்னால ஒழுங்கா பிடிக்க முடியாது இதுல எங்கேர்ந்து வரையறது? கை வேலை வேறயா? என்னய போய் கை வேலை செய்ய தெரியுமான்னு கேக்குற. உனக்காக பாத்திரம் தேய்ப்பேன் துணி துவைப்பேன் அவ்வளவுதான் எனக்கு தெரியும். வேற கை வேலை எல்லாம் தெரியாதே

அடடா அடடா இவரு பாத்திரம் தேய்ப்பராம். துணி துவைப்பாராம். வீடு கூட்டுவாராம். நான் கால் மேல கால் போட்டுகிட்டு உல்லாசமா டிவி பார்ப்பேனாம். வந்துட்டாரு சொல்றதுக்கு. கேக்குறவங்க கேப்பாங்கன்னா கேழ்வரகுல நெய் வடியுதும்பாங்களாம்.

ஏன் அப்போ கோவிட் சமயத்துல நான் உனக்கு எவ்வளவு வேலை செய்து இருக்கேன்..

 செஞ்சுட்டாலும்.. அப்ப நான் 40 வருஷமா இந்த வீட்டுக்கு குப்பை கொட்டறேனே அதை எங்கே எழுதறது?

சரி விடுமா அத . இனிமே குப்பையை நான் கொட்டிடுறேன். இப்போ ஐடியா.. ஐடியா.. ஐடியாவை சொல்லு.

ஏதாவது பழங்கதைய சொல்லுங்க.. நான் 1950ல ட்ரெயின்ல போனேன். 1970 ல பஸ்ல போனேன் .1990ல அமெரிக்காவுக்கு போனேன் ஆப்பிரிக்கா போனேன் அப்படின்னு எதையாவது சொல்லுங்க..

நான் அடுத்த தெரு கூட தாண்டினதில்ல. என் ஆபீஸ் அடுத்த தெரு. பின்னால உன் பொறந்த வீடு. என் வாழ்க்கை இத்தனநாளும் மூன்று தெருவிலேயே முடிஞ்சு போச்சு.

அதைத்தான் நான் ரொம்ப நாளா புலம்பறேன். ஒரு சினிமா உண்டா ஒரு கடைகண்ணி உண்டா? ஒரு நாலு ஊர் போய் பார்த்தது உண்டா? உங்களுக்கு வடிச்சு கொட்டியே என் வாழ்க்கையும் முடிஞ்சு போச்சு..

ஏன் பத்து வருஷம் முன்னால கூட பெங்களூர் போனோமே மறந்து போச்சா

எப்படி மறக்கும்? அன்ரிஸர்வ்ட் கம்பார்ட்மெண்ட்ல என்னய திணிச்சு அங்க போய் இறங்குறதுக்குள்ள தலைவிரி கோலமா புடவை ஒரு பக்கம் பை ஒரு பக்கம்னு நான் இறங்க கல்யாணத்துக்கு வந்த புள்ள வீட்டுக்காரங்க அத்தனை பேரும் என்ன பாத்து சிரிப்பா சிரிச்சது எனக்கு மறக்குமா? அழகா ஒரு ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட்ல ஏசியில கூட்டிட்டு போறதுக்கு வக்கு இல்ல, 10 வருஷம் முன்னால பெங்களூருக்கு போன கதையை ஞாபகப்படுத்துறாரு..

சரி மா அதையும் விடு. வேற ஏதாவது டாபிக் சொல்லு

சினிமா பத்தி ? பழைய சினிமா பாட்டு. அதுல கொஞ்சம் கேள்வி. அப்புறம் இந்த நடிகைய பிடிக்கும் அந்த நடிகரை பிடிக்கும். சரோஜாதேவி பிடிக்கும் வைஜெயந்திமாலா பிடிக்கும் அப்படின்னு எழுதுறாங்களே. அது மாதிரி நீங்க எழுதுங்க.

எங்க? நேத்து பார்த்த சினிமாவே இன்னைக்கு ஞாபகம் இருக்க மாட்டேங்குது.சினிமா மேல எனக்கு ஆசையெல்லாம் கிடையாது. அதுவும் இல்லாம எங்க அம்மா என்ன அப்படி வளர்க்கவும் இல்லை. அந்த காலத்துல பேசும் படம் புத்தகத்தை பிரிச்சாலே எங்க அப்பா என்ன பிரம்பால அடிப்பார். அதனால வேற ஏதாவது டாபிக் சொல்லுமா.

இப்பதான் அந்த மீம்ஸ் கீம்ஸ்அது இதுன்னு வந்திருக்கே .ஏதாவது நாலு வடிவேலு படத்தைப் போட்டு மத்யமர கலாய்ச்சு அதுல போடுங்க.

அதுக்கெல்லாம் டெக்னாலஜி அறிவு வேண்டுமா அது என்கிட்ட இல்லையே.

அது எனக்கு தெரியுமே. அறிவு இருந்திருந்தா ஒரே ஆபீஸ்ல நாப்பது வருஷம் குப்பை கொட்டுவீங்களா? .
ஏதோ ஸ்ம்யூல்ன்னு பாட்டு பாடறாங்களே. நீங்களும் ஒரு பழைய பாட்டு அவுத்துவிடுங்க. கல்யாணத்தன்னிக்கு உங்கம்மா என் பையன் பிபி ஸ்ரீனிவாஸ் மாதிரி பாடுவானு சொல்லி பீத்திகிட்டாங்க. இன்ன தேதி வரைக்கும் நீங்க பாத்ரூம்ல பாடி கூட நான் கேட்டது இல்லை .இப்பவான்ன கேட்கிறேன். உங்க பாட்டு திறமைய.

அதெல்லாம் ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம் என்கிற எக்செப்ஷன்ஸ் ல வருவது அதெல்லாம் சீரியஸா எடுத்துக்காத வேற ஐடியா சொல்லு

ஏதாவது சோக சமாச்சாரம் உங்க வாழ்க்கையில் நடந்தது. உங்களுக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடந்தது ...அந்த மாதிரி ஏதாவது போட்டீங்கன்னா லைக் அள்ளும்.

ஏம்மா உன் புண்ணியத்துல நான் சந்தோஷமாதான இருக்கேன். எதுக்கு அழுமூஞ்சி போஸ்ட் எல்லாம் போட்டுக்கிட்டு. அதுவும் இல்லாம நான் அழுதேன்னா அந்த மூஞ்சி எனக்கே சகிக்காது..

அப்பாடா! ஒரு நல்ல வார்த்தை சொல்லி இருக்கீங்க இத்தனை வருஷத்துல போகட்டும்.

ஏதாவது கதை கவிதை வெண்பா..

நான் படிச்ச ஒரே புத்தகம் பள்ளிக்கூட பாடம்‌. அதுல வந்த கதையும் செய்யுளுமே எனக்கு இப்போ ஞாபகம் இல்ல. நானாவது கதையாவது எழுதுவதாவது. வெண்பான்னா என்னான்னே தெரியாது. பொன்னியின் செல்வனில் வரும் செம்பா தான் எனக்கு தெரியும்..

நினச்சேன்.. சரி விடுங்க. அவங்க அவங்க தன் மனைவியை பத்தி புகழ்ந்து அவங்க இல்லன்னா எனக்கு வாழ்க்கையே இல்லை அவங்க நளாயினி மாதிரி சாவித்திரி மாதிரி சீதை தமயந்தி மாதிரி அப்படி இப்படின்னு எழுதுறாங்களே! ஏன் என்ன பத்தி ஒரு நாலு வார்த்தை புகழ்ந்து எழுதி என் போட்டோவையும் போடுங்களேன். 

இது நல்ல ஐடியா. ஆனா அதுக்கு நான் நிறைய யோசிக்கணுமே. அப்படியே யோசித்தாலும் ரொம்ப மேட்டர் தேறாது. அதனால இந்த ஐடியாவை நான் தள்ளுபடி செய்றேன்.  

சட்டுனு வெளில போயி ஒரு நாலு மத்தியமர் ஆளுங்கள பார்த்து அவங்களோட போட்டோ எடுத்துக்கிட்டு ரெண்டு வடை போண்டா ஸ்வீட் சாப்பிட்டுட்டு அதை ஒரு நாலு பேஜ் எழுதுங்க.

சாரிம்மா..அடிக்கிற வெயில என்னால வெளியில் எல்லாம் போக முடியாது.

ஏதாவது பிறந்தநாள் .எனக்கு அறுபதாவது கல்யாண நாள் அப்படின்னு போட்டு கூடவே நம்ப கல்யாண நாள் போட்டோவையும் போடுங்க.

வேணாமா அது ரொம்ப ரிஸ்க்கு .நான் எப்படி உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு யோசிப்பாங்க . படிக்கிறவங்க பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு இல்ல.

அப்ப பேசாம மத்தியமர்ல வர எல்லா போஸ்டையும் படிச்சிட்டு கமெண்ட் போட்டு டாப் கமெண்ட்டேட்டர்னு ஏதாவது பேரை வாங்கி அதை ஒரு போஸ்டா போட்டு சந்தோஷப்பட்டுக்கோங்க.

எங்கம்மா... அதுக்கும் வழி இல்லையே.. நான் ஒரு போஸ்ட படிச்சு அதை பத்தி விரிவா கமெண்ட் போட யோசிச்சு எழுத ஆரம்பிக்கறதுக்குள்ள 100 கமெண்ட் வந்துடுது. அதுக்கு அப்புறம் நம்ம கமெண்ட்ட யார் படிக்க போறாங்க அப்படின்னு நான் பேசாம விட்டுவிடுவேன்.

 உங்க முகத்தை செல்பி எடுத்துக்கிட்டு போட்டோவை போடுங்க. கீழே ஒரு நாலு லைன் எதையாவது கோவில் வாசல்ல சினிமா தியேட்டர் வாசல்ல போன போது எடுத்தது அப்படின்னு போடுங்க.. 100 கமெண்ட்டாவது கேரண்டி..
ஆனா என்ன உங்க முகத்தை நான் மட்டும் தான் பார்க்க முடியும். மத்தியமர்ல போட்டீங்கன்னா நாலு நாளைக்கு எல்லாருக்கும் தூக்கம் வராது..

அதுவும் கரெக்ட் தான். உனக்கு ஏத்த கணவரா நான் இருக்கேன். அதனால மத்தவங்க கண்ணுக்கு அழகா தெரிய முடியுமா?

இந்த நக்கலுக்கு ஒரு குறைச்சலும் இல்லை. பேசாம மத்தியமர்ல்ல ஸ்லீப்பர் செல்லா இருந்தோமா வேடிக்கை பார்த்தமான்னு இருங்க.. இப்போ கடைக்கு போய் உருப்படியாஒரு கிலோ கத்திரிக்காய் வாங்கிட்டு வாங்க. 

இது ரொம்ப நல்ல ஐடியா அப்படியே அந்த கறிகாய் கடைல இன்றைய கறிகாய் விலை பட்டியல போட்டோ எடுத்துட்டு வந்துடறேன்.. 
 அதப்பத்தி இன்னிக்கு ஒரு போஸ்ட் போட்டுட்டு தான் தூங்குறது. 

அட உங்களுக்கு கூட ஒரு நல்ல ஐடியா தோணி இருக்கே. நிச்சயம் நானூறு கமெண்ட் கேரண்டி..!
ராஜேஸ்வரி நீலகண்டன்

No comments: