Pages

Search This Blog

Thursday, May 18, 2023

ஆன்மீக முன்னேற்றத்திற்கு குருவின் அவசியம்

ஆன்மீக குரு என்ற தலைப்பில் நிறைய போஸ்ட்கள் இங்கு பலராலும் போடப்படுகின்றன.

 முதலில் அந்த தலைப்பு கொடுத்ததன் மூலம் நம்மிடமிருந்து என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியுமானால் அதுவே ஒரு பெரிய விஷயம் .
 
ஆன்மீகம் என்பது என்ன?. நமது ஆத்மாவை அறிதல் என்றே நான் புரிந்து கொள்கிறேன்.ஆத்மாவை அறிவது அதாவது நம்மை அறிவது.

அந்த தேடலின் தொடக்கம் மிகவும் அடிப்படையான ஒரு கேள்வி. நான் யார்?
 
 இந்த பிரபஞ்சம் முழுவதிலும் இருக்கும் பல நூறு கோடி உயிர் மற்றும் ஜடப்பொருள்களில் நாமும் ஒரு சிறு துளி. அப்படிப்பட்ட பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் நான் யார் என்பதை நாம் புரிந்து கொள்வதற்கு நமது ஆயுள் போதாது .
 
 அதற்குத்தான் நமது வேதங்களிலும் வேதாந்தங்களிலும் பல பல மேற்கோள்களும் கதைகளும் அறிவுரைகளும் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு இருக்கின்றன. வேதங்களை புரிந்து கொள்ள முடியாத போது புராணக் கதைகளும், நம் பாரத தேசத்தில் வாழும், வாழ்ந்த பல மகான்களின் வரலாறும் நமக்கு உதவுகின்றன. 
 
குரு என்பவர் யார்?
 கோ குரு?
  எனும்பொழுது இந்த பவசாகரத்தை தானும் தாண்டி நம்மையும் தாண்ட வைப்பவர் என்பது ஆதிசங்கரர் சொன்ன பதில்.
  நமது சனாதன தர்மத்தில் இந்த பவசாகரம் அதாவது சம்சாரக்கடல் என்பது பார்க்க பிரம்மாண்டமாக நம் அறிவுக்கு எட்டாததாக தாண்டவே முடியாததாக தோன்றினாலும் அனுமார் இலங்கையை அடைய கடலை தாண்டியது போல அதை சுலபமாக நம்மை தாண்ட வைப்பவர் யாரோ அவரே குரு.
 
 ஒரு நல்ல குருவை தேர்ந்தெடுப்பதில் நமக்கு பக்க பலமாக இருப்பது நமது ஆன்மீக தேடல். அதன் தீவிரம் . ஒரு சிஷ்யனின் தேடலின் தீவிரத்தைப் பொறுத்தே ஒரு நல்ல குரு கிடைப்பார் .
 ஈஸ்வரனே ஒரு குருவாக நம்முன் தோன்றுகிறார் என்பதே நமது நம்பிக்கை.
 
 நமது பெரியோர்களின் வாக்கின்படி குரு ஒரு நல்ல சிஷ்யருக்காக தவம் செய்வாராம். ஆதிசங்கரர் வருகைக்காக கோவிந்த பகவத் பாதர் பல ஆண்டுகளாக நர்மதை நதிக்கரையில் காத்திருந்ததை ஆதிசங்கரரின் வரலாற்றை பார்த்தால் நமக்கு தெரியும்.
 
 எனவே குருவைத் தேடி நாம் போவதை விட குரு நமக்காக காத்திருப்பது என்பது நமது ஆன்மீக தேடலின் வெற்றி .
 
 பல பல விதமாக குரு என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை கற்பித்து அவரால் நமக்கு என்ன ஆகும் என்பதை வெறும் பொருளாதார ரீதியாகவும் நமது இன்றைய வாழ்க்கைக்காகவும் அவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டி குருமார்களை நாடுவது நாம் செய்யும் தவறு தானே தவிர குரு என்பதின் தத்துவத்தில் உள்ள பிசகு அல்ல.
 
 ஒரு குழந்தைக்கு நல்ல படிப்பு தேவை என்றால் எத்தனை விதமாக நாம் ஆராய்ச்சிகள் செய்து பல பள்ளிகளை குறித்த தகவல்களை திரட்டி பிறகு ஒரு நல்ல முடிவு எடுத்து நம் குழந்தைகளை சேர்க்கிறோம். அந்த தேடலின் தீவிரம் நம்மை ஒரு சரியான இடத்தில் கொண்டு சேர்க்கிறது.
 
 அதைப்போலத்தான் குருவின் தேடலும். இதை புரிந்து கொள்ளாமல் எடுக்கும் முடிவுகளால் நாம் வழி தவறி சென்று விட்டு குரு என்ற தத்துவத்தையே ஏளனம் செய்வது நம் அறியாமையை தவிர வேறு என்ன? 

இளமைக் காலத்தில் பக்தியும் பண்பும் கொண்டு நாம் வளர்ந்து பின்பு அந்த பக்தியும் பண்பும் முதிர்ச்சி அடையும் பொழுது உலகம் குறித்த நம் பார்வையும் மாறுகிறது. அப்பொழுது இந்த சாரமற்ற வாழ்க்கையை நாம் உணரும் பொழுது நமது மனம் உள்நோக்கி பயணிக்கிறது.
அந்த சமயத்தில் ஒரு நல்ல குருவின் அருள் பார்வை கிடைக்கும் பொழுது அந்த சக்தி நமக்கு ஒரு வழிகாட்டியாக மட்டுமல்லாமல் ஒரு கடலை தாண்ட உதவும் படகு போல நம்மை சுலபமாக இந்த சிக்கலான வாழ்வியலில் இருந்து பிறவிப் பெருங்கடலை தாண்ட வைக்கிறது.


குருவின் கடைக்கண் பார்வையே நம்மை உய்விக்கும் என்றாலும் நமது பங்கு அதில் நிறைய இருக்கிறது .ஒரு தீவிர ஆன்மீகத் தேடலின் அத்தியாவசிய அங்கமாக ஆறு விஷயங்கள் நமக்கு உபதேசிக்கப்படுகின்றன.

சமம்”, “தமம்”, “உபரதி”, “திதிக்ஷை”, “ச்ரத்தை”, “ஸமாதானம்” என்பதே அவை.

மனதை வெளி விஷயங்களில் அலையவிடாமல் அடக்குவது சமம். புலன்களை அடக்குவது தமம். பிறகு உபரதி என்பது எந்த பாதிப்பும் இல்லாமல் உள்முகமாக நிலைத்து நிற்பது. திதீக்ஷை என்பது பொறுமை.
சிரத்தை என்பது சாஸ்திர விஷயங்களிலும் குருவின் வாக்கியத்தில் உறுதியான நம்பிக்கை. அடுத்து சமாதானம் என்பது உறுதியாக ஆத்மாவை பிரம்மத்தில் நிலைக்க வைப்பது.

இவை அனைத்தையும் ஒருங்கே கொள்ளும் ஒருவனுக்கு முமூக்ஷு என்று பெயர். அதாவது மோக்ஷத்தை அடைவதில் விருப்பம் உடையவன்.
 இது அனைத்தும் ஒரு குருவின் உபதேசத்தால் மட்டுமே ,அவருடைய வழிகாட்டுதலில் மட்டுமே ஒருவனை இந்த நிலைக்கு உயர்த்தும்.

ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும் என்றால் ஒரு நல்ல அகலில், நன்கு உருக்கிய நெய் விட்டு உள்ளங்கையில் வைத்து திரித்த விளக்குத்திரியை விட்டு பக்குவப்படுத்தி வைக்கும் பொழுதுதான் அதில் சுலபமாக விளக்கேற்ற முடியும். அதேபோலத்தான் நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்வதும். பக்குவமான அந்த கணத்தில் அந்த ஈசனே ஒரு குருவாக நம் அக விளக்கை ஏற்றி வைக்க வருவார்.

 ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று சொல்வதற்கே ஒரு குரு தேவைப்படும்போது இந்த பரம்பொருளும் நீயும் ஒன்றே என்று சொல்லும் மிக உயர்ந்த தத்துவத்திற்கு ஒரு குரு இல்லாவிட்டால் எப்படி?

வாழ்வது ஒரு முறை என்றும், மறு ஜென்மாவில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும், என் மனதிற்கு விரோதம் இல்லாமல் நான் நல்லவனாக இருக்கிறேன் அது போதும் என்றும் எனக்கும் கடவுளுக்கும் நடுவில் மூன்றாவது மனிதர் இதற்கு என்றும் விதண்டாவாதம் பேசி நமக்கு தெரியாத ஒன்றை புரியாத ஒன்றை ஆராயாமல் அது தவறு என்று கூறுவதற்குப் பெயர் அறியாமையே அன்றி வேறு என்ன?

ஆனால் இப்படி சொல்பவர்களும் மனதில் அந்தப் பேருண்மையை உள்ளே தேடிக் கொண்டே இருப்பவர்கள் தான். எனவே என்றோ ஒரு நாள் அவர்கள் மனமும் உள்நோக்கி திரும்பும் பொழுது ஒரு குரு அங்கும் பரிணமிப்பார் ‌.

அவர்தான் இவர்களின் ஆன்மீக குரு என்பதை அப்பொழுது புரிந்து கொள்வார்கள்.

ஸ்ரீ குருப்யோ நமஹ.

ராஜேஸ்வரி நீலகண்டன்.

No comments: