தொலைத்த அனுபவம்
By Rajineel Neelakant
காட்சி 1
வருடம் 1966- 67
இடம் குன்றத்தூர்.
எங்கள் வீடு
காலை 11 மணி.
அம்மா... குளந்தை .....
யாருப்பா நீ?
அம்மா குளந்தைக்கு. அம்மா........
நிறைய கொடுத்தாச்சுப்பா சும்மா காலை நேரத்துல வந்து படுத்தாதீங்க ...
இல்லைங்க அம்மா... குளந்தை...
என்ன டாக்டர பாக்கணுமா ? இது வீடுப்பா. பக்கத்துலதான் கிளினிக் அங்க போய் பாரு.. இந்த மனுஷனுக்கு எத்தனை தடவை சொல்றது.. வீடும் கிளீனிக்கும் ஒண்ணா இருந்தா இதுதான் பிரச்சனை... ..கிளினிக் அங்க . போர்ட பார்த்து போங்கப்பா..
.
இல்லைங்கம்மா குளந்தைக்கு அம்மா நீங்க தானே? குளந்தை உங்களுதானேன்னு கேட்க வந்தேன்..
அதுவரைக்கும் அவன் தோள் மேலே சமர்த்தாக உட்கார்ந்து கொண்டிருந்த குழந்தையை ( என் தங்கையை)பார்க்காத என் அம்மா அவளைப் பார்த்ததும் அய்யய்யோ என் குழந்தை தான் பா அது !!. எப்படி இங்க வந்தது? உன் கையில் எப்படி?
அதுதான் மா ... சொல்ல வந்தேன்...குளந்தை பஸ் ஸ்டாண்ட்ல நின்னு அழுதுகிட்டு இருந்தது. நம்ம வீட்டு குழந்தையா தான் இருக்கணும்ன்னு தூக்கிட்டு வந்து குடுக்கலாம்னு வந்தா நீங்க என்னென்னமோ சொல்றீங்க ! டாக்டர் வீட்டு குழந்தையா தான் இருக்கணும்னு நினைச்சேன். குளந்தையை பத்திரமா பாத்துக்கங்கமா...
ஐயா உங்களுக்கு ஏதாவது... ? அதெல்லாம் ஒன்னும் வேண்டாமா.. நான் வரேன்...
அரை மணி கழிந்து பக்கத்தில் இருந்த லைப்ரரிக்கு போய் புத்தகத்துடன் உல்லாசமாக உள்ளே வந்த 9 வயது அக்கா ஆன எனக்கு வாசலில் காத்திருந்தது மண்டகப்படி.
ஏண்டி குழந்தை பின்னால வரத பாக்காம நீ அப்படியே நேரா போயிடுவியா ..குழந்தை உன் பின்னாலேயே வந்திருக்கா பாதியில வழி தெரியாம நின்னுட்டு பஸ் ஸ்டாண்ட்ல அழுதுட்டு இருந்திருக்கு. நல்ல வேளை எந்த சாமி புண்ணியமோ திரும்ப கிடைச்சது .இனிமே எங்காவது வெளியில் போனா குழந்தை பின்னால வராளான்னு பாத்துட்டு போ..
( இது எப்படி இருக்கு?!)
காட்சி 2
இடம் கரூர்.
இரவு மணி 10
ஒரு தியேட்டர் வாசலில்
வருடம் 1967-68
இடுப்பில் ஒன்றும் பின்னால் நாலுமாக ரயில் வண்டி போல என் அம்மா வர பக்கத்தில் ரயில் வண்டி பெட்டியில் ஒன்று இரண்டு குறைந்த என் பெரியம்மா வர பெரும் கூட்டமாக தியேட்டரில் இருந்து வெளியே வந்த குடும்பம்.
ராஜா ...குழந்தைகள் கைய பத்திரமா பிடிச்சுக்கோ. எங்கடா மைதிலியை காணோம்.
அவ தியேட்டரில் இருந்து சினிமா முடிஞ்சு வெளியில வரச்சியே உங்க பின்னால ஓடி வந்துட்டாளே சித்தி..
என்னடா இப்படி சொல்ற இங்க இல்லையேடா! என்னடா ராஜா உன்ன நம்பி தானே குழந்தையை விட்டேன். உன் பக்கத்துலதான உட்கார்ந்துண்டு இருந்தா..
பயப்படாதே சித்தி..இரு சித்தி தியேட்டருக்குள்ளே போய் பாத்துட்டு வரேன் .
நாலா பக்கமும் பத்து வயசு 12 வயசு பெரிய மனுஷர்கள் தேட ஆரம்பித்தார்கள்
அம்மா அதோ பாரு முன்னால போறது மைதிலியா? யார் கையோ புடிச்சிட்டு போறாளே..( சொன்னது 11 வயது பெரிய மனுஷி.. வேற யாரு நானே தான்!)
அந்த அழுது வடியும் தெருவிளக்கின் வெளிச்சத்தில் இரண்டு கொத்தவரங்காய் நீட்டினா மாதிரி இரட்டைப் பின்னலும் ஒரு கவுனும் ரெண்டு கால்களும் தெரிந்த உருவத்தை பார்த்ததும் ..
டேய் நாகேஷா போய் அது மைதிலியான்னு பாருடா...
சரி சித்தி ..
அட ஆமா சித்தீ மைதிலியேதான்!
ஏங்க எங்க குழந்தைய நீங்க ஏங்க புடிச்சுட்டு எடுத்துட்டு போறீங்க?
தம்பீ....குழந்தை என் கைய புடிச்சிட்டு ரொம்ப நேரமா நடந்து வந்துட்டு இருக்கு.. அது உங்க குழந்தைங்களா ?
பதில் சொல்லாமல் குழந்தையை பிடித்து இழுத்துக்கொண்டு வந்து அம்மாவிடம் விட்டதும் அவள் முதுகில் பொத்தென்று அடி விழுந்த சத்தமும் 'பே' என்று அவள் அழுத சத்தமும் எல்லோருக்கும் நிம்மதியை தந்தது என்றால் ஆச்சரியமாக இல்லை?
இப்படி எல்லாம் தொலைந்து போய் திரும்ப கிடைச்ச பொக்கிஷமான என் தங்கை மைதிலி இன்று 6 முதல் 60 வரை எல்லோருக்கும் மை'சித்தி' ( திலி தொலைந்து போய்!) என்ற செல்லமான சித்தியாக இருந்து கொண்டிருக்கிறாள்.
இன்னமும் அவளுக்கு தான்தான் ஒரிஜினல் மைதிலியா இல்லை
தவிட்டுக்கு வாங்கின குழந்தையா என்ற சந்தேகம் உண்டு. அதற்கு காரணம் அவளது சின்ன வயசு போட்டோ என்று பெரிதாக எதுவும் இல்லை .
எங்கள் எல்லோருக்கும் அந்த தவழற ஸ்டேஜ்ல இருக்கற போட்டோ உண்டு. அவளோடது மட்டும் கால வெள்ளத்தில் காணாமல் போய்விட்டது!!
ஏதோ ஜாடை இருக்கிறதால் பிழைத்தது.!
ராஜேஸ்வரி நீலகண்டன்
Mythily Krishnamoorthy
No comments:
Post a Comment