Pages

Search This Blog

Thursday, May 25, 2023

மீண்டும் ஒரு கல்யாணம்

மீண்டும் ஒரு கல்யாணம்.By Rajineel Neelakant அம்மா நாளைக்கு காத்தால சீக்கிரம் ரெடி ஆயிடு. நான் இன்னொரு தடவை உனக்கு சொல்ல மாட்டேன். ஏண்டி என்னை இப்படி உசுர வாங்குற? இந்த வயசுக்கு மேல எனக்கு இந்த கல்யாணம்... கச்சேரி எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லை .என்னை விட்டுடு..   ஏன்மா நான் இதைப் பற்றி திருப்பி உன் கிட்ட பேசுறதா ஐடியாவே இல்ல. மாலதி மாமி இன்னிக்கே மூணு நாலு தரம் போன் பண்ணி கேட்டுட்டா உங்க அம்மாவுக்கு இதுல சம்மதம் தானே ஒத்துண்டு தானே வரா. பின் வாங்க மாட்டாளே என்று ஏகப்பட்ட கேள்வி கேட்டுண்டே இருந்தா.  என்ன மாட்டிவிட்டு விடாதே  காலைல 6:30 மணிக்கு நான் வரேன். நாம   மண்டபத்துக்கு போறோம். . சிம்பிளா அங்க   கல்யாணம் கச்சேரி அமர்க்களம் அவ்வளவுதான் நான் அதுக்கு மேல நான் ஒண்ணும் சொல்லல. என் மாமியார் மாமனார்    எல்லாரும் நேரா அங்க மண்டபத்துக்கே வரேன்னு சொல்லியாச்சு.   நீ சொல்றத சொல்லிட்டே. ஆனா நீ வரச்சே நான் ரெடியா எல்லாம் இருக்க மாட்டேன்.    அம்மா ஒரு தரமான்னு  நான் சொல்றதை கேளு .அப்பா போய் கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் ஆயிடுத்து. அவரோட மல்லுக்கட்டியே நீ உனக்குன்னு வாழவே இல்ல. இன்னமும் நீ இப்படி  தனியா மோட்டு வளையை பார்த்துண்டு இருக்கிறது எனக்கு பிடிக்கல.     நான் எங்கடி தனியா இருக்கேன்? எனக்குன்னு ஒரு ரொட்டீன் இருக்கு. நான் பாட்டுக்கு சிவனேனு என் ஸ்லோகம் உண்டு என்னோட சமையல் உண்டுன்னு இருக்கேன். அதுல நீ என்ன தப்பு கண்டுபிடிக்கிறே? எனக்கு புரியல. சரி சரி அம்மா இந்த ஆர்கியுமென்ட் எல்லாம் வேண்டாம் காலையில் 6:30 மணிக்கு வரேன். நல்லா அழகா டிரஸ் பண்ணிண்டு இரு. அவ்வளவுதான்.அலுப்பாக இருந்தது ராதா மாமிக்கு. இந்த பொண்ணு நல்லது செய்றேன் என்று நினைத்துக் கொண்டு இப்படி நம்மை நாமாக இருக்க விடாமல் படுத்துகிறாள். சரி காலையில்  பார்த்துக் கொள்வோம் என்று வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க தூங்கப் போகும் போது மீண்டும் செல்போனில் ஒரு வாட்ஸ்அப் மெசேஜ். அம்மா காலையில் 6:00 மணிக்கு நான் வந்து விடுவேன் என்று.  அடி போடி நீயும் உன் உற்சாகமும் என்று அலுத்தபடியே தூங்கப் போனாள்.   சொல்லி வைத்தாற் போல் காலை 6 மணிக்கு ஷோபா வந்து வாசல் கதவை  தட்டிவிட்டாள்.அம்மா குளிச்சாச்சா? என்னம்மா இந்த புடவையை கட்டிண்டிருக்கே? நல்ல பட்டு புடவையா கட்டிக் கூடாதா? நீ இந்த மாதிரி பண்ணுவேன்னு தெரிந்துதான் நான்  ஒரு  புது புடவையா எடுத்துண்டு வந்து இருக்கேன் . அதுக்கு மேட்ச்சா பிளவுஸ் இதோ இருக்கு .போன வாரம் வந்தபோது உன்னோட பிளவுஸ் ஒண்ணை அபேஸ் பண்ணிட்டு போய் டெய்லர் கிட்ட கொடுத்து அழகா தைச்சாச்சு. இந்த புடவையை கட்டிக்கோ நல்ல அழகான உனக்கு பிடித்த கிளி பச்சையில் வயலட் பார்டர். இந்த பிளவுஸ்சையும் போட்டுக்கோ .என்னடி இது? இந்த மாதிரி எம்பிராய்ட்ரி பிளவுஸ் எல்லாம் நான் போட வேண்டாம்னு முடிவு பண்ணி பல  வருஷம் ஆயிடுத்து. இப்ப போய் இதெல்லாம் போட்டு... என்ன ரொம்ப தான் படுத்துற.. சரிமா நான் படுத்தல. இன்னைக்கு ஒரு நாள் நான் சொல்றதை கேட்டுடு அப்புறம் நான் உன் வழிக்கே வரமாட்டேன் என்று சிரித்தாள் ஷோபா.வீட்டை பூட்டிக் கொண்டு கையில் ஒரு சின்ன பையுடன் கிளிப்பச்சை பட்டுப் புடவை கட்டி மெல்லிய பவுடர் பூச்சோடு நெற்றியில் ஒரு சிறு பொட்டை வைத்து  ஒரு ஜேடு மணிமாலையும் கழுத்தில் போட்டு  வந்த தன் அம்மாவின் அழகை காரில் இருந்தபடியே ரசித்து பார்த்தாள் ஷோபா.இந்த அம்மாவுக்கு தான் என்ன ஒரு வைராக்கியம்? எத்தனை கஷ்டப்பட்டாலும் முகத்தில் அது துளியும் தெரியாமல் இருப்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை. 52 வயதில் தன் வாழ்க்கையை தொலைத்ததாக நினைத்துக் கொண்டு ஒரு சிறிய வட்டத்தில் வளைய வரும் அம்மாவை எப்படி மாற்றுவது என்று ரொம்ப நாளாக யோசித்து அதற்கு இன்று முதல் ஒரு கதவு திறக்கிறது என்று கடவுளுக்கு நன்றி சொன்னாள். இனிமேலாவது தன் அம்மா சந்தோஷமாக இருக்கட்டும் என்றபடியே என்று நினைத்தபடியே காரை ஸ்டார்ட் செய்தாள். அம்மா கம்பர்ட்டபிளா உட்கார்ந்துக்கோ. இன்னும் பத்து நிமிஷத்துல மண்டபம் வந்துடும் .அங்க எல்லாரும் உனக்காகத்தான் காத்துண்டிருக்கா  மறந்துடாதே. என்னை ஏண்டி இப்படி படுத்துற என்று திரும்பவும் அலுத்துக் கொண்டாள் ராதா மாமி. நெஞ்சில் கிர்ர்ரென்று ஹெலிகாப்டர் பறப்பது போன்ற ஒரு உணர்வு . அம்மா கீழ இறங்கு மண்டபம் வந்துடுத்து. அட ரெடியாக வாசலிலேயே மாலையோட நம்ப தங்கம் அத்தை நிற்கிறாளே. அத்தை எப்படி இருக்கே சௌக்கியமா ? மகராசி உன்னால உங்க அம்மா சந்தோஷமா இருக்கிற சீனை நான் பாக்க போறேன். அதுக்காகவே விடியக் காத்தால வந்தாச்சு .இதோ பாரு ஒரு கூட்டமா எல்லாரும் சேர்ந்து அந்த பிள்ளையார்  சன்னதியில் நிற்கிறதை. வாம்மா ராதா. இன்னைக்குதான்  நிம்மதி ஆச்சு. என் தம்பியின்னாலும் அவன் உன்னை படுத்திய பாட்டை நான் கிட்ட இருந்து நிறைய பார்த்திருக்கேன் இனிமேலானு நீ நிம்மதியா சந்தோஷமா இருக்கணும் வா வந்து உட்காரு.  எங்க லேடிஸ்  குரூப் எல்லாம் சேர்ந்து சிம்பிளா ஏற்பாடு பண்ணி இருக்கிற இந்த சீதா கல்யாணத்தில் நீ தான் மெயின் பாடகி .உன்னுடைய பஜனை பத்ததியோடு சேர்ந்த அழகான கச்சேரியை கேட்க நாங்கள் எல்லாம் ரொம்ப ஆவலா இருக்கோம்.  சீதா கல்யாண வைபவத்துக்கு நீ பாட ஒத்துப்பயோ இல்ல உன்னோட பட்டாம்பூச்சி கூட்டுக்குள்ள அடைந்து விடுவியோ என்று எல்லாருக்கும் ஒரு சஸ்பென்ஸ் இருந்தது. இதோ இந்த மாலதி 100 கேள்வி என்ன கேட்டுட்டா.  அங்க பாரு அந்த மேடையில் பக்கவாத்தியாக்காரா எல்லாரும் ரெடி. நீ வந்து  உன்னோட கச்சேரியை ஆரம்பி.  "என் தம்பி உனக்கு பண்ணிய பெரிய துரோகம் நீ பாடக்கூடாது என்று உன் வாயை அடைத்தது தான்‌ அதற்கு அவனுடைய அக்காவாக நான் பரிகாரம் தேடிக்கிறேன். இந்த சீதா கல்யாண கச்சேரி உனக்கு ஒரு ஆரம்பம் தான்" என்று கண்களில் நீர் தளும்ப சொன்ன  நாத்தனாரின் காலில் விழுந்து நமஸ்காரம் செய்து கிட்டத்தட்ட 25 வருடங்களாக மறைந்து போயிருந்த தனது சங்கீத கலையை உயிர்ப்பித்தாள் ராதா மாமி. இனி ராதா மாமி வாழ்வில் எந்நாளும் கல்யாணமே.. வைபோகமே... சரிதானே. ராஜேஸ்வரி நீலகண்டன்

No comments: