#சபாஷ்மத்யமர்_படக்குறுங்கதைப்போட்டி
Rajineel Neelakant
“ஏய் வெள்ளைக்காரி! என்னாத்த பொழுது விடிஞ்சி பொழுது போனா தேடிக்கினே இருக்கே?
என்னா! நான் கூவிக்கினேகீறேன். அந்த இருட்டு பொந்துல என்னா வேல உனுக்கு. “
“ம்.. நீ கொக்கரிக்கறது என் காதுல உழுது. நானும் ஒரு நாளைப்போல முட்டை உடறேன். இதோ நாளைக்கு பொரியும் நாளன்னைக்கி பொரியும்னா திடும்னு காணாத பூடுது. அத்த மீறி குஞ்சுங்கள கண்ல பாத்தா அதுங்களும் ஒரு மாசம் கூட நம்ப கூட்ல இல்லாத ஓடிப் பூடுதுங்கோ.
இதோ எதுத்த ஊட்டு சிவப்பி என்னா கம்பீரமா தன் குஞ்சுங்கள இட்டுக்குனு ஊர்வோலம் போறா.
கொக் கொக் கொக்குன்னு அவ குஞ்சுங்கள மேய்க்கறதை பாத்தா எனுக்கு கண்ல தண்ணிகட்டுதுயா. எங்கதான் போவும் எம்பசங்க?”
“ஏய் வெள்ளச்சி உனுக்கு நானு. எனுக்கு நீயின்னு இருக்கசொல்ல என்னாத்துக்கு வருத்தப்படற? குஞ்சுங்க எங்கியோ சந்தோஷமா புள்ள குட்டிங்களோட இருக்குதுங்கன்னு நினைச்சுக்க. ஏதோ தீனி தின்னமா,முட்டை உட்டமான்னு கிட. “
———————
“ஏ...!மாமா இதோ இங்க பாரு எட்டு குஞ்சுங்க. என்னா அழகா இருக்குதுங்க? இதுங்கள கண்ணுக் கண்ணா வளக்கல எம்பேரு வெள்ளச்சி இல்ல ஆமா”
————-—
“மாமா மத்யானம் கூரை மேல கண்ணசந்துட்டேன். இப்ப அதுங்கள தீனிக்கு கூட்டிப்போலாம்னா எங்கயும் கண்ல படலியே. நான் என்னா பண்ணுவேன். “
“வெள்ளச்சி அதுங்க பெருசாயி ஒரு மாசம் மேல ஆய்போச்சி.இன்னும் உன் பின்னாலயே சுத்துங்களா. போய் வேலையப் பாரு. “
“அதுங்க எங்கன்னு தெரியாம. நான் சாப்பட மாட்டேன், தூங்க மாட்டேன் , கூவ மாட்டேன்.”
“என்னா வெள்ள இப்பிடி வெள்ளந்தியா இருக்க. சொன்னா கேளும்மா. உனுக்கு எதுவும் தெரியாத வரைக்கும் சந்தோஷமா இரும்மா. “
———————-
“இது என்ன விடிகாலைல என்னைய ‘கொக் கொக்’குன்னு எழுப்பற வெள்ளச்சி சத்தம் கேக்கல?
ஏய் வெள்ளச்சி என்ன ஆச்சி. ஏன் இப்பிடி சுருண்டு கெடக்கற?
டேய் டைகர் நாயே என்னாடா பாத்தா அவ? நீதான் அவளை வம்படியா இழுத்துக்கினு போனியா?
நேத்து அந்த வண்டில ஏறி எங்க போன வெள்ளச்சி? நீ அங்க என்னத்த பாத்த? அப்பிடி அழுவாத வெள்ள. என்னதான் நடந்துது?
ஹைய்யோ நம்ம புள்ளைங்க வறுபடற அந்த கோரத்தை பாத்துட்டியா? அதுக்குத்தானே உன்ன வண்டில ஏறாத ஏறாதன்னு அடிச்சிக்கினேன். உன் குஞ்சுங்க காணாம எங்க போவுதுங்கன்னு நீ கேக்கும் போதெல்லாம் என் நெஞ்சு பட்ட வேதனை என்னோட போகும்னு நெனச்சேனே..”
அடுத்த நாள் முதல் அந்த வெள்ளச்சி ஏன் முட்டை இடவேயில்லை என்று யாருக்குமே புரியவில்லை.
PS: I wrote this story for a FB group ‘Madhyamar’ for a படம் பார்த்து கதை எழுது contest.
No comments:
Post a Comment