போர்த்துவதும் கலைப்பதும்(கலாய்ப்பதும்)
By Rajineel Neelakant
இந்தப் போர்வை என்றும் போத்தி என்றும் பெட்ஷீட் என்றும் பல வித பெயர்களில் படுக்கை மேல் புரளும் துணியை இரவோ பகலோ போர்த்திக்கொண்டு உறங்குவது ஒரு கலை. அது போர்த்தல் எனப்படும்.
ஒரே துணிதான் ஆனால் அதை கையாள்வதை வைத்து பலபேரின் சைகாலஜியை அறியலாம்.
இதோ ஒருவர் .. வாருங்கள் அவருடைய படுக்கை அறைக்குச் செல்வோம். ஒண்ணும் ப்ரச்சனை இல்லை. அவர் கர்ம வீரர். போர்த்தியை போர்த்தி உறங்குவதற்குள் நாம் தூங்கிவிடுவோம்.
இதோ அவர் இந்த அறைக்குள் வந்தாச்சு.
அழகாக மடிக்கபட்ட போர்வையை மெள்ள அதற்கு வலிக்காதபடி பிரிக்கிறார். பிறகு துவங்குவது பழைய மலையாளப்படம் போல மெதுவாகத்தான் போகும்.
நான்கடிக்கு மூணறை அடி என்ற ஏடாகூட அளவில் உள்ள அந்த கம்ஃபர்ட்டர் எனும் போர்வைக்கு அவர் முதலில் எது நீளம் எது அகலம் என்ற பேருண்மையை நிலை நாட்ட படாத பாடு பட்டு முடித்ததும் தலை பாகத்தையும் கால் பாகத்தையும் குறிப்பெடுப்பார். அது லேசில் தன் தலையைக் காண்பிக்காது. ஒரு வழியாக தலை பக்கத்தை வாஸ்கோடகாமா கோவாவை கண்டுபிடித்தாற் போல கண்டுபிடித்து முடிக்கவும் இப்போது அடுத்த ப்ரச்சனையான ஒரே மாதிரி டிசைனும் ஃபினிஷும் கொண்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல இருக்கும் போர்வையின் முன் பின் பாகத்தை அடையாளம் காணும் படலம்.
இப்படி நாலுமுறை அப்படி நாலுமுறை திருப்பி திருப்பிப் பார்த்து ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ரேஞ்சுக்கு குடைந்து ஏதோ ஒரு அடையாளத்தைக் கைக்கொண்டு முன் பாகத்தை உறுதிப்படுத்தி..... இருங்க இருங்க ... தூங்கிடாதீங்க.
இப்போது அந்தப் போர்வையை ஒரு குழந்தையை படுக்க வைப்பதுபோல மெள்ள நீளவாக்கில் விரித்து முன்புறம் மேலே வரும்படியும் தலைப் பக்கம் தலைகாணியின் அருகில் ( இரண்டுக்கும் இடையில் ஒரு அடி இடைவெளி வேண்டும்!) வரும்படியும் வைத்து மென்மையாக ஒரு உதறு உதறி படுக்கையின் வெளிப்புறமாக ஒரு சின்ன முக்கோணம்போல மடித்து விட்டு.... (அடடடடா பொறுமையா இருங்க ...)
அறுபது வருஷத்துக்கு முன் அவங்கம்மாசொல்லியிருக்காங்க “படுக்கப்போகும்முன் பாத்ரூம் போயிட்டுதான் படுக்கணும்டா” எனவே இவர் போர்வையிடம் ரகசியமாகச்்சொல்லி விட்டு வெளியே சென்று பிறகு கைகால் அலம்பி துடைத்து பின் அந்த முக்கோணம் பகுதியை மெல்ல விலக்கி போர்வைக்குள் புகுந்து அதையே தலைக்கு முக்காடு போல் போர்த்தி கண்மூடி தூங்கும்போது ...
அட எழுந்துருங்கப்பா.. இனி அவர் குறட்டை விடுவது சகிக்காது. கிளம்புங்க.
அடுத்ததாக ... இவர் முந்தினவருக்கு நேர் எதிர்.
முதல்ல படுத்துக் கொண்டு விடுவார். பிறகு காலையில் காரேபூரேவென்று மடித்து வைக்கப்பட்ட போர்வையை காலால் நிமிண்டி, உதைத்து,சைக்கிள் ஓட்டி ஒரு வழி பண்ணி ஒரு ட்ரபீஸியமோ கிபீஸியமோ ஏதோ ஒரு ஷேப்பில் போர்த்தி அந்த அயர்ச்சியிலேயே தூங்கி விடுவார்.
மூன்றாவது ஆள் ரொம்ப சொகுசு. அவருக்கு யாராவது போர்த்தி விடணும். அந்த போர்த்தருக்காக அரைமணி கூட காத்திருப்பார்.
ஏதாவது நிழலாடினதும் அரைக்கண்ணைத்திறந்து டேய் .. கொஞ்சம் அந்தப் போர்வையை எடுத்து என்மேல போட்டுட்டுப் போடா என்பார். ரொம்ப நியாயவானாக அதை உதறி புஸ் என்று காற்றில் உப்ப வைத்து அழகாக அவர்மேல் போர்த்திவிட்டு இந்தப் பக்கம் நகர்ந்தால் ,போர்வை ஒரு குழந்தையைப்்போல அவர்முதுகுப்பக்கம் நீளவாக்கில் இருக்கும். இவர் ஒருபக்கம் குறட்டை விடுவார். கேட்டால் .. கொஞ்ச நேரம் கழிச்சு போத்திக்கிறேண்டா இப்பவே என்னத்துக்கு என்பார்.
அடுத்தவர் நாலாமவர். அவர் காலடியில் இரவு முழுதும் போர்வை நாய்க்குட்டி போல் மடித்தது மடித்தபடி இருக்கும்.
விடியற்காலை நாலுமணி சுமாருக்கு டபக் என்று மயானப் பிணம் போல் நெட்டுக்குத்தலாக கண்ணைத்திறக்காமலே எழுந்திருப்பார். காலடிப் போர்வையை குத்துமதிப்பாக கண்ணை மூடியபடியே பிரித்து தலையோடு கால் போர்த்தி எதுவுமே நடக்காதது போல் நித்திரையை தொடருவார்.
ஐந்தாமவர்...
அட போங்கப்பா நீயும் உன் போர்வை சைகாலஜியும் என்று நீங்க போர்வையையைத் தேடும் முன் நான் தூங்கணும். அதுக்குமுன்னால நல்ல போர்வையா ஒண்ணு வாங்கணும். அதுக்கு நாளைக்கு கடைக்கு போகணும்
By
Rajeswari Neelakantan
No comments:
Post a Comment