அண்ணே நீங்களுமாண்ணே?
இந்த சொத்து நம்ப அப்பா இருக்கும்போதே எனக்குன்னு சொல்லி வைச்சாரு. இப்போ திடீர்னு எனக்கு ஒண்ணும் கெடையாது ..வெளிய போடான்னா நாங்க எங்கண்ணே போவோம்?
இதோ இந்தக் கொழந்தைங்களைப் பாருங்கண்ணே நண்டும் சிண்டுமா நிக்குதுங்க.
அதோ என் பொண்டாட்டி மாசத்துல பாதிநாளு ஆஸ்பித்திரிக்கு அலையவே சரியா இருக்கும் அதுக்கு.
மாமா நீங்களான்னு அண்ணனுக்கு எடுத்துச் சொல்லுங்க. பெரியப்பா உங்களுக்குத் தெரியாததா? நீங்க கூடவா ஊமையாயிட்டீங்க?
ஊர் மொத்தம் வேடிக்கைப் பார்க்க பஞ்சாயத்தில் அழுதும் கெஞ்சியும் வாதாடிக் கொண்டிருந்தான் துரை.
பேர்தான் துரை. கையில் அஞ்சு பைசா கூட இல்லாதவன். நேற்றுவரை தனதென்று நினைத்து நிலத்தை உழுது பயிர் செய்து கொண்டு அதன் ஆதாரத்தில் எதிர்காலக்கவலையை மறந்திருந்தவனுக்கு அப்பா செத்த பத்தாம் நாள் இடியாக வந்திறங்கியது அண்ணன் காண்பித்த உயில்.
எப்போது அதில் அப்பா கையெழுத்துப் போட்டார்? எப்போது அது அண்ணன் கைக்குப் போயிற்று?
நினைவு தப்புவதற்கு முதல்நாள் இரவு வரை “ டேய் தொரை.. அந்த அல்லிக்கொளம் பக்கத்து காணி உனக்குதாண்டா. அது உங்கம்மா சாவறபோது சொல்லிட்டு செத்தது. அத வச்சு குடும்பத்தை காப்பாத்திக்க. மத்த எல்லாம் அத இத சொல்லி உங்க அண்ணங்காரன் எழுதி வாங்கிட்டாம்பா.
என்னால இவ்ளோதான் உனக்கு குடுக்க முடிஞ்சுது. மன்னிச்சுக்கடா கண்ணு “ என்று கண்ணில் நீர்கட்ட சொன்னது பொய்யா?
“தலைவரே நீங்க சொல்லுங்க
போனவாரம் அவரு நல்ல நெனவோட இருக்கும் போது உங்க கிட்ட கூட அதையேதானே சொன்னாரு. சித்தப்பா நீங்களும்தானே இருந்தீங்க. கூட ,இதோ நிக்கறாரே நம்ம மாமா பெரியப்பா எல்லாரும்தானே இருந்தாங்க. “
எல்லோரும் கடப்பாறையை முழுங்கியது போல மௌனமாக நின்றதைப்பார்த்ததில் திடீரென்று ஆவேசம் வந்தவனைப்போல “நான் கோர்ட்டுக்கு போயி உங்களையெல்லாம் கூண்டுல ஏத்தி ஜெயிச்சுக்காட்றேன். கடவுள் இருக்காரா இல்லியான்னு பார்த்திருவோம் “ என்று சொல்லிவிட்டு விறு விறு என போனவன்போனவன்தான்.
குடும்பம் குழந்தைகள் எல்லோரையும் மறந்து நேரே கோர்ட்டுக்குப் போய் வக்கீலய்யா கால்ல விழுந்து கதறினான். மதுரையில் இலவச சட்ட ஆலோசனை என்று சமூக சேவையாக செய்து வந்த கேசவ மூர்த்தி அவனை மெல்லத்தூக்கி நிறுத்தினார்.
“உயில் ஸ்ட்ராங்கா இருந்தா ஒண்ணும் செய்ய முடியாது. போலி கையெழுத்தா இருந்தா அதை நிரூபிக்கணும்.செலவு இல்லாம செய்து தரேன். ஆனா கேஸ் எப்படி வேணா போகும்.
நான் பேசிப்பாக்கறேன். இல்லன்னா கோர்ட்லதான் பாக்கணும்”
கேசவ மூர்த்தியின் பேச்சை அண்ணன்காரன் சட்டையே செய்யலைன்னதும் வழக்கு கோர்ட்டுக்கு வந்தது.
இதோ எதிர்ல நிக்கற அண்ணனையும் மத்த உறவுகளையும் பார்த்ததும் கொஞ்சம் கலங்கித்தான் போனான். வக்கீலின் கேள்விகள் அவன் காதிலேயே விழவில்லை.”நிலமே வேணாம்னு சொல்லிடலாமா? அண்ணனே அனுபவிச்சுட்டு போவட்டும். கைய கால வச்சு உழைச்சு சம்பாதிச்சு குடும்பத்தை காப்பாத்திப்போம். கோர்ட் என்னா கேஸ் என்னா?” வாயு வேகத்தில் ஓடியது எண்ணங்கள் துரைக்கு. ஐயா.... என்று நீதிபதியைப் பார்த்து ஆரம்பித்தவனைப் பார்த்து வக்கீலய்யா கண்ணைக் காண்பிச்சார்.
உள்ளே தனது அறைக்கு அழைத்துச்சென்றார்.
“என்ன துரை? பாசம் கண்ணை மறைக்கிறதா?
கோர்ட்ல வாயே திறக்காம நின்னா நியாயம் எப்படிக் கெடைக்கும்?
நீ என்ன நினைக்கிறேன்னு தெரியறது. ஆனா இப்போ போய் நீ எதுவும் வேணாம்னா ஊர் சிரிக்கும்.
நீதான் பொய் சொன்னேன்னு நினைச்சுக்கும்.
என்னை நம்பு. கண்டதையும் யோசிச்சுக் குழம்பாதே. நீதி கிடைக்கும்.
என்ன ... ஜெயிச்சா உனக்கு நிலம். இல்லையா நீ தர்மத்துக்காக போராடினேங்கற த்ருப்தியாவது கிடைக்கும்...”
என்று அரைமணிநேரம் உபதேசம் பண்ணியதும் துரைக்குக்கு கொஞ்சம் தெளிவு கிடைத்தாற் போல இருந்தது.
நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
மீண்டும் கோர்ட்டுக்குள் நுழைந்தான் துரை.
Chapter 1 verse 28
அர்ஜுன உவாச
த்ருஷ்ட்வேமம் ஸ்வஜனம் க்ருஷ்ண,யுயுத்சும் சமுபஸ்திதம்
சீதந்தி மம காத்ராணி முகம்ச பரி சுஷ்யதி.
( {இந்த போர்க்களத்தில்} எனது சொந்தங்கள் எல்லாம் { எதிர்வரிசையில் } நிற்பதைப்பார்க்கும் போது எனக்கு உடல் நடுங்குகிறது. வியர்வை பெருகுகிறது. வாய் உணர்ந்து போகிறது)
Chapter 1 verse 32
ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் சுகானிச
கிம் நோ ராஜ்யேன கோவிந்த கிம் போகைர் ஜீவிதேன வா
(எனக்கு இந்த ராஜ்யமும் அதன் சுகங்களும் வேண்டாம் கிருஷ்ணா. இந்த ராஜ்யத்தினாலும் போகங்களாலும் என்ன சுகம்?)
Chapter 2 verse 5
(குரூன்ன ஹத்வா..........
ஸ்ரேயோ போக்தும் பைக்ஷயம் அபீஹ லோகே
இவர்களை கொன்று சுகம் அனுபவிப்பதை விட
அதற்கு பதில் பிச்சை எடுத்து வாழ்வதே மேல் கிருஷ்ணா)
Chapter 2 verse 35
ஶ்ரீ பகவான் உவாச
பயாத்ரணாத் உபரதம் மம்ஸயந்தே த்வாம் மஹாரதா:
ஏஷாம்ச த்வம் பஹுமத: பூத்வா யாஸ்யசி லாகவம்.
( {அர்ஜுனா,இப்போது போர் வேண்டாமென்று போர்க்களத்தை விட்டு நீ சென்றால்} உன்னை இப்போது உயர்வாக எண்ணி வரும் உன் மக்களே நீ பயந்து ஓடுவதாக எள்ளி நகையாடுவார்கள் )
Chapter 2 verse 37
ஹதோ வா ப்ராப்ஸ்யசி ஸ்வர்க்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்
தஸ்மாத் உத்திஷ்ட கவுந்தேய யுத்தாய க்ருத நிஸ்சய:
(அர்ஜுனா,நீ தோற்று இறந்தால் ஸ்வர்க்கம் உனது. ஜெயித்தாலோ இந்த ராஜ்யம் உனது.
எனவே வீரத்துடன் நிச்சய புத்தியுடன் போர் புரி. )
No comments:
Post a Comment