#கோவில்கள்
By rajineel neelakant
திருநீர் மலை
இன்று மார்கழி ஒன்றாம் நாள். ஆண்டாள் நம்மை எல்லாம் வருந்தி வருந்தி அழைத்துக் குள்ளக்குளிர நீராடச்சொல்லி யசோதை இளம் சிங்கத்தைப் பாட அழைத்த முப்பது நாட்கள்.
சிறு வயதில் ஒவ்வொரு வைகுண்ட ஏகாதசிக்கும் திருநீர்மலை ஏறி அந்த ரங்கநாதனைச் சேவித்தது நினைவில் ஆட ,மீண்டும் திருநீர்மலை போக வேண்டும் என்ற ஆசை இன்று நிறைவேறியது.
நின்றான் கிடந்தான் நடந்தான் இருந்தான் என்று நான்கு நிலைகளில் பெருமாள் நம் கண்குளிற மனம் விரும்பிய படியெல்லாம் தரிசிக்க தோயாத்ரி என்ற திரு நீர் மலையில் அற்புதமாக குடி கொண்டு இருக்கிறார்.
பெருமாள் நம்மை உயர்த்திக் கொண்டே போவது போல வெவ்வேறு தளங்களில் நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் உடலையும் உள்ளத்தையும் உன்னத நிலைக்கு ஏற்றுகிறார்.
முதலில் நீர் வண்ணப்பெருமாள். ‘நின்ற’ திருக்கோலம். சற்றே சிறிய வெங்டாஜலபதி போன்றத் தோற்றம். பட்டாச்சாரியாரும் திருப்பதி மாதிரியே இங்கும் ப்ராத்தனைகள் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்கிறார்.
சங்கு சக்ர ஊரு வரத ஹஸ்தங்களுடன் பளப்பளவென ஜம்மென்று நின்று கொண்டு நம் மனதை மயக்குகிறார்.
தாயார் அணிமாமலர் மங்கைத் தாயார்.
அணிமாமலர் என்றால்?
நம் கேள்விக்குப் பட்டர் பதில் சொல்கிறார்” தங்க நகைகளை தாமரை மலர்களாக மாற்றி ஆசையுடன் அணிந்திருப்பதால் அணிமாமலர் மங்கை“.
என்ன அழகான பெயர். யாராவது தன் பெண் குழந்தைகளுக்குக் கூட வைக்கலாம்.
அடுத்த சந்திதியில் சின்ன மண்டபத்தில் ஆண்டாள் ,ரங்கமன்னாரை எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றவனாக நாம் வேண்ட ஞாபகப்படுத்திக்கொண்டு நிற்கிறாள்.
கூடவே இன்னொரு சந்நிதியில் ராமர் சீதா லக்ஷ்மண அனுமனுடன் சேவை சாதிக்கிறார்.
திருக்குளம் விஸ்தாரமாக அருமையாக இருக்கிறது.
இனி மேலே செல்வோம்.
கொஞ்சம் நிறையவே படிகள் ஏறி ( 200 படி இருக்கலாம்) ரங்கனாதரையும் ரங்கநாயகியையும் முதலில் சேவிப்போம்.
அதற்கு முன், பாதி தூரத்தில் வலப்புறம் நாலு படிகள் இறங்கி கண்மூடி கைகூப்பி ஏகாந்தமாக ராமனை மனத்தினால் சிந்தித்து நிற்கும் அனுமனைத் தரிசிப்போம்.
இனி, மேலும் படிகள் ஏறி
ஆதிசேஷன் படுக்கையாக ஶ்ரீதேவி பூதேவிகள் காலை வருட ஆனந்தமாகப் பள்ளி ‘கிடக்கும்’அரங்கனை காண்போம் . கண்களை எடுக்கவே முடியவில்லை.
நாளன்றைக்கு வைகுண்ட ஏகாதசி என்பதால் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
சின்ன கர்ப்பக்ருஹம் ஆனால் தெய்வீக அலைக்கதிர்கள் நம் உள்ளத்தை தூய்மைப் படுத்துகின்றன.
ரங்கனை சேவித்தபின் இடதுபுறமாக நாலைந்து படிகள் ஏறி சுற்றிவந்தால் ஆஹா.. ஓங்கி உலகளந்த உத்தமனான உலகளந்த பெருமாள் த்ரிவிக்ரமனாக அருமையாக ஏகாந்தமாக ‘நடந்து’ கொண்டருக்கிறார். அவர் பேர் பாடி தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து நீங்காத செல்வம் ஆகிய வைகுண்ட வாசம் வேண்டி வணங்குவோம்.
அடுத்த சந்நிதியே மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கிய சீரிய சிங்கம்,இங்கு சாந்த நரசிம்ஹராக ‘அமர்ந்த’ திருக்கோலத்தில் ப்ரஹ்லாதனைக் காத்தவர் இங்கு சீரிய சிம்ஹாஸனத்திலிருந்தபடி நாம் வந்த காரியம் என்னவாக இருந்தாலும் நிறைவேற்ற காத்திருக்கிறார். நாமும் அச்சு பிச்சு என்று எதையாவது கேட்காமல் அவன் அருள் மட்டும் வேண்டுவோம்.
வெளியே விஸ்தாரமான ப்ராஹாரம். இன்று பெயிட்டியோ ஏதோ ஒரு புயல் என்று அமர்க்களப்பட்டது. அது காணாமல் போனாலும் சிலு சிலு வென்று அருமையான காற்று ,கொஞ்சமே இருந்த பக்த ஜனங்கள். ஆங்காங்கே ஆட்டுக்குட்டிகளின் ‘மே மே.. கத்தல்கள் சீக்கரமே இருட்டியதால் பளிச் பளிச்சென்று தூரத்தில் கண்ணுக்கெட்டியவரை தெரிந்த மின்விளக்குகள் என இனிமையான விருந்து கண்களுக்கும் உடலுக்கும்.
அட இது என்ன புளியோதரை வாசனை மூக்கைத்துளைக்கிறதே!?
சிறிது வயிற்றுக்கும் இன்பமளிக்க புளியோதரை மிளகு தோசை மிளகாய்ப்பொடி அது போக லட்டு முறுக்கு தட்டை. நல்ல வியாபாரம்!
பக்தர்கள் அனைவரும் பிக்னிக் மாதிரி உல்லாசமாக அனுபவித்து சாப்பிடுவதைப் பார்த்த படியே படி இறங்கி பரமபதம் அட்டையையும் தாயக்கட்டையையும் வாங்கிக் கொண்டு செங்கண் திருமுகத்துச் செல்வத்திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புற வேண்டி விடை பெறுவோம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
No comments:
Post a Comment