Pages

Search This Blog

Wednesday, December 19, 2018

Bhagavad Gita stories

வாழ்வில் மறைந்திருக்கும் கீதை. 

இன்று முதல் அவ்வப்போது பகவத் கீதையில் உள்ள கருத்துக்களை மையமாகக் கொண்டு சில கதைகளை எழுதலாமே என்று தோன்றியது. அதை செயல் படுத்தும் விதமாக உருவானதே இந்தக் கதை. பகவான் கிருஷ்ணரின் அருளால் இது தொடர வேண்டி ஆரம்பிக்கறேன். 
ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம் அஸ்து 

கீதைக் கதைகள். - by Rajineel Neelakant
“ஒண்ணா இப்படி இதுதான் கரெக்ட்டுன்னு சொல்லணும். இல்லியா இது தப்பு இப்பிடி போவதேன்னு சொல்லணும். 
இது என்னா இவரு முன்னயும் போவாத பின்னயும் போவாத நம்பள கொழப்பறாரு.. “
சலித்துக்கொண்டாள் பொன்னம்மா. 

“ஏம்மா? என்னா ஆச்சு? யாரு உன்னிய கொழப்பினது?  ஏன் இப்பிடி பொலம்பறே?”
கேள்வி கேள்வி கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தது அவள் மகன் கிஷ்டன். 

அது ஒண்ணியும் இல்லடா. உனுக்கு கல்யாணம் ஆவலியே. எந்தப் பொண்ணப்பாத்தாலும் நொள்ள நொட்ட சொல்றீயேன்னு இதோ ராயவரத்துல இருக்குற சோசியர பாத்துட்டு வந்தேன். 
நம்ப சொந்தக்காரங்களானா நம்மள கேலி பேசறாங்க. 
உங்கப்பன் என்னாடான்னா அது நடக்கும் போது நடக்கும் என்னாத்துக்கு வெசனப்படறேன்னு சொல்லிட்டு திண்ணைல உக்காந்துகினு பல்லக்குத்திகினுகிறாரு.” என்றாள் பொன்னம்மா

“சரி இப்போ மேட்டரு என்னா அத்தச்சொல்லு” இது கிஷ்டன்

“ மேட்டரு என்னா மேட்டரு. சோசியரு பரிகாரம் பண்ணு. ஆனா அதுக்காவ உடனே கல்யாணம் ஆவணும்னு நெனைக்காத. நீ பாட்டுக்கு நான் சொல்றதைச் செய்யி. ஆனா பலன் வர்லீயேன்னு யோசிக்காத. அது தன்னால வரும்போது வரட்டும். அப்டீன்றாரு. 
இப்ப நான் பரிகாரம் செய்யறதா வாணாமா? நீயே சொல்லு”

அம்மா. அவரு கரெக்டாதான் சொல்றாரு. 
இப்பப் பாரு. இதோ நீ சமைக்கறேன்னு வச்சிக்க. இன்னிக்கி செவ்வாய் கிழமை. பச்சத்தண்ணி கூட பல்லுல படாத இருப்ப. ஆனா எங்களுக்கு வக்கணையா சமைச்சுப் போடுவ இல்ல?

டேய் ., நான் என்னா சொல்றேன் நீ என்னாடான்னா சமையலு அது இதுன்னு பேசறே?

இரும்மா. இதோ பாரு. சமைக்கும்போது நீ என்னா யோசிப்பே?

என்னா யோசிப்பேன். சாமி உனுக்கு செய்யிற படையல் இது அத நல்லா செய்ய வையிப்பான்னு கும்பிட்டுப்பேன். அப்பால நீங்கல்லாம் வயுறு ரொம்ப சாப்ட்டு நல்லா இருக்கணும்னு வேண்டிப்பேன்

அப்பறம்?

அப்பறம் நான் பாட்டுக்கு சமைக்க ஆரம்பிச்சு சாமிக்கு படையல் வைப்பேன். 

அப்புறம்?

அப்புறம் என்னா? நீங்க சாப்புடுவீங்க. இப்போ என்னாடா சொல்ல வர்ற?

இதோ கேளு. சமையல் செய்யும்போது உன் நெனப்பல்லாம் சாமிக்கு படைக்கறோம். அத நல்லா சமைக்கணும்னு மட்டும்தான இருந்துது? அதனால அத்த மட்டும் யோசிச்சு செய்தத்தால நல்லா சமையல் செய்ய முடிஞ்சது. அது இல்லாத அத நாங்க சாப்புடும் போது இப்பிடி சொல்வோமோ அப்பிடி சொல்வோமோ. இல்லாகாட்டி வேற எதாவது யோசனைல இருந்தா என்னா ஆவும் ?

என்னா ஆவும்?  சமையல் வாயில வைக்க வழங்காது. எனக்கும் சாமிக்கு செய்தது இப்பிடி ஆய்போச்சேன்னு வருத்தமாயிடும். 

ஆங்... அத்ததான் சோசியரு சொல்லி இருக்காரு. 
நீ பாட்டுக்குனு பரிகாரத்த கரெட்டா செய்யி. பலன யோசிச்சன்னு வையி. உன் கவனமெல்லாம் பலன் வருமா வராதான்னு ஆகி பரிகாரம் ஒழுங்கா செய்யாத, இதுவும் கெட்டு பலனும் கெட்டு வெறும்வருத்தம்தான் மிஞ்சும்னு சொல்லாம சொல்லிக்கீறாரு. 
இப்பப் புரியுதா?

அடடா.. நல்லா பளிச்சுனு புரியுதுடா மவனே. 

இதோ ஊட்டப் பாத்துக்க நான் போயி மாரியாத்தாளுக்கு வெளக்குப் போட்டுட்டு வரேன்.

Story #2
#கீதைக்கதைகள்

ஓம் நமோ பகவதே ருத்ராய... கணீரென்ற குரலில் ஈஸ்வர பட்டர் ஆரம்பித்ததும் கோவில் வாசலில் சுருண்டு படுத்திருந்த கருப்பு விருட்டென்று எழுந்து படபட வென உடலை உதறிவிட்டு அலர்ட் ஆனது. 

இன்னும் அரை மணிக்குள் அதற்கு சாப்பிட ஏதாவது கிடைத்து விடும் என்ற நம்பிக்கையுடன் சோம்பல் முறித்தது. 

உள்ளே பட்டர் சிவனாருக்கு குடமாக குடமாக ஜலம் விட்டு அபிஷேகம் பண்ணிக்கொண்டிருந்தார். 
மனம் மட்டும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. 

முப்பது நாற்பது வருடங்களுக்குமுன் பாலும் தேனும் பஞ்சாம்ருதமுமாக சொட்ட சொட்ட அபிஷேகம் நடந்த லிங்கம் இப்போது வற்றாத கிணற்று நீரின் புண்ணியத்தால் கங்கா ஜலமாக பாவித்து நடக்கும் இந்த ஜலாபிஷேகம் மட்டுமே மிச்சம். 

சோழர்கள் கட்டிய பெரிய விஸ்தாரமான கோவில். 
பொன்னும் மணியும் சிதறிய இடத்தில் இன்று கல்லும் மண்ணும் நிறைந்திருக்கிறது. 

“ஈஸ்வரா.. உனக்குக்கூட நல்லகாலம் கெட்டகாலம்னு ஒண்ணு உண்டா? இல்ல எங்கபாவத்தையெல்லாம் நீ ஏத்துண்டு இப்படி உன்னையே வருத்திக்கறயா?”
கண்ணில் கண்ணீர் தளும்பியது பட்டருக்கு. 

அப்போது வாசலில் கருப்பு பலமாகக் குரைக்கும் சத்தமும் மனிதர்கள் பேச்சுக்குரலும் கேட்டது. 
பட்டர் கர்ப்பக்ருஹத்திலிருந்து எட்டிப்பார்த்தார். 

“ சாமீ... இவங்க வெள்ளைக்காரங்க. நம்ப கோயில் மாதிரி இருக்கற பெரிய கோவில்களை எல்லாம் பாக்கணும் ஃபோட்டோ எடுத்து வெளிநாட்ல காமிச்சா பணம் நெறய வரும். அத வச்சு நம்ம கோயிலை சீர் செய்துக்கலாம்னு சொல்றாரு. 
ஐயா கோவில காண்பிக்கச்சொன்னாரு. அதான் கூட்டிக்கிட்டு வந்தேன். “
ஊர் மணியக்காரர் வீட்டு வேலைக்காரன் மூச்சு விடாமல் சொன்னான். 

“ஈஸ்வரா உனக்கும் ஒரு வழி கெடைக்கறதோ என்னமோ” 
இதோ உள்ள வாங்கோ. ஓ இங்கிலீஷ்காராளா. ப்ளீஸ் கம் இன்.. 

ஐ வாண்ட் டு டேக் ஃபோட்டோஸ். ஐ மீன் .. நான் உங்க சிலையெல்லாம் ஃபோட்டோ எடுக்கலாமா?

தாராளமா... 
நன்னா தமிழ் பேசரேளே! 

மட மடவென பூஜையை முடித்து விட்டு அந்த வெள்ளைக்காரனுக்கு எல்லா சிலைகளையும் காண்பித்து படம் எடுக்க உதவி விவரம் சொல்லி முடிக்க மணி இரண்டாகி விட்டது. 

கருப்பு பொறுமை போய் மெல்ல உர் உர் என்று உறும ஆரம்பித்ததும்தான் பட்டர் மணியைப்பார்த்தார். 

“அட டா நாழி ஆயிடுத்து சாயங்காலமா மிச்சத்தை பாக்கலாமா?”

“இல்ல இல்ல இது போதும் அப்பறம் இன்னொரு நாள் வரேன். “ என்றபடி நடந்தவரைப் பார்த்தபடியே கதவைப் பூட்டினார் பட்டர். 

சாயங்கால பூஜையின் போது மனம் குதூகலித்தது. 
“ஆஹா ஈஸ்வரா நல்ல காலம் பொறந்துடும்பா. இனி உனக்கு தேர் என்ன திருவிழா என்ன அமர்க்களம்தான்” யோசித்தபடியே வெளியே வந்தவர் அரை குறை இருட்டில் அந்த வெள்ளைக்காரன் திடீரென கண்முன்னால் வந்ததும் திடுக்கிட்டுப்போனார். 

என்னா ஐயிரே.. பயந்திட்டியா? என்ற படியே மணியக்காரனின் வேலையாளும் முன்னால் வந்தான். 
“என்னப்பா? இந்த நேரத்துல? கோவில் நடை சாத்தியாச்சு. நாளைக்குப் பாக்கலாமே.இப்போ என்ன அவசரம் ?”

அவசரம்தான் ஐயிரே. சாவிய இப்பிடி எங்களாண்ட கொடுத்துட்டு போய் உட்காருங்க. நாளைக்கு காலைல எல்லாம் பேசிக்கலாம். ஏதாவது வாயத் தொறந்தீங்கன்னா உங்க கை நாளைக்கு பூஜை செய்யாது. போங்க போங்க அப்பிடி ஓரமா இருங்க. நாங்க ஒரு நாலஞ்சு சிலைகள மட்டும் எடுத்துக்கிட்டு போயிருவோம். சத்தம் போடாம வேடிக்கப் பாருங்க.. இல்ல.. “ கத்தியை நீட்டினான். 

“ டேய் என்னடா பண்ணப்போறீங்க? ஈஸ்வரா !
என்னப்பா இது சோதனை. உனக்கு பாலும் தேனும் அபிஷேகம் பண்ணலாம்னு ஆசைப்பட்டதுக்கு தண்டனையா? 
ஊர் நல்லா இருக்கணும்னுதானே உனக்கு தினமும் இருக்கறதை வச்சு மனசார பூஜை பண்ணறேன். 
சிவ சிவா” 
கண்ணீர் கட்டியது பட்டருக்கு. 
ஒவ்வொரு சிலையாக சாக்குப் பையில் நிதானமாகக் கட்டி வண்டியில் ஏற்றிய படியே ஒரு பெரிய கல்லை அவர்மீது எறிந்தான் அந்த வெள்ளைக்காரன். 

அதே சமயம் வில்லிருந்து புறப்பட்ட அம்பைப் போல் பாய்ந்த கருப்பு அவனையும் அந்த வேலைக்காரனையும் அவர்கள் ஓட நினைக்கும் முன் கீழே தள்ளி கால்களை  கடித்துக் குதறியது. 
“ஈஸ்வரா ஈஸ்வரா ..,கருப்பா ..! நீதாம்பா அந்த ஈஸ்வரன். தர்மத்தை காப்பாற்ற எந்த உருவத்திலும் வருவாயே நீ.  உன் பலத்தின் முன் இந்த அதர்மக்காரர்கள் எந்த மட்டு. “
இன்னமும் உறுமிக்கொண்டிருந்த கருப்பனுக்கு அர்த்த ஜாம பூஜைப்ரசாதப் பாலைக் கொடுத்து ஆசுவாசப் படுத்தினார் பட்டர். 

ஊர் அத்தனையும் கோவில் வாசலில் கடிபட்டு மயங்கி இருந்த இருவரையும் பார்த்து நிற்க விடிந்தது காலை நேரம். M
பட்டர் மீது எறியப்பட்ட ‘கல்’ சிலை ஏனோ சிரித்தது போல இருந்தது.

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத 
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்

பரித்ராணாய சாதூனாம் வினாஷாயச துஷ்க்ருதாம் 
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே



Story#3

#கீதைக்கதைகள்
By Rajineel Neelakant

ஐயா கொஞ்சம் இங்க பாருங்க. இதோ இந்த ஃபோட்டாவத்தான் கொஞ்சம் பாருங்கன்னு சொல்றேனே. 

அட !நான் யாருங்கறது இப்ப முக்கியமில்லீங்க. 
நான் சொல்ற விஷயத்த மட்டும் கேளுங்க. 
இதோ இந்த ஊர்லயேதான் நான் பொறந்தேன் வளர்ந்தேன். இங்கயேதான் செத்தேன். 

ஐய்யய்யே பயப்படாதீங்க..நான் பேயெல்லாம் இல்லீங்க. 
இப்படி நடு நடுவுல எதாவது ரியாக்‌ஷன் காண்பிச்சங்கன்னா நான் சொல்ல வந்தது விட்டுப் போயிடுங்க. 

அதாவது நான் பொறக்கறதுக்கு ரொம்ப காலத்துக்கு முன்னால எங்களுக்கு நூறு ஏக்கரா நிலம் இருந்ததாம். அப்புறம் என்னன்னவோ ஆகிப்போயி நான் பொறந்தபோது ,இருக்கற வீட்டத்தவிர வேற சொத்து எதுவுமில்லன்னு ஆகிப்போச்சாம். 
எங்க அப்பத்தா பொழுதன்னிக்கும் அதச்சொல்லி சொல்லி அழுது என்னைய உசுப்பேத்தி விடறாமாதிரி “டேய் நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ நான் கண்ண மூடறதுக்கு முன்னாடி ஒரு ஏக்கரா நிலமாவது வாங்கணும்டா” சொல்லிக்கிட்டே இருக்கும். 
அதனாலயோ என்னவோ  எனக்கு எந்த நிலத்தைப்பார்த்தாலும் அது எனக்கு சொந்தமானதுங்கறா மாதிரியும் அத எப்படியாவது பிடுங்கிடமுன்னும் தோணிடிச்சி. 

அப்பத்தான் எனக்கு ஒரு ஆள கடவுளா அனுப்பினா மாதிரி பரிச்சயமாச்சு. 
அவன் ஃப்ராடுன்னு தெரிஞ்சாலும் தெரியாத மாதிரி அவனோட கூட்டு சேர்ந்து ஊரான் நிலத்துக்கெல்லாம் போலி பத்திரம் தயாரிச்சு என்னோடதுன்னு ஆக்கி ரிஜிஸ்டர் பண்ண ஆரம்பிச்சேன். 
அங்கங்க அடாவடியா ஆளுங்கள வச்சு நிலத்து சொந்தக்காரங்கள விரட்டி விட்டு அங்க குடிசையப் போட்டு பந்தாவா உட்காரும்போது
என்னா த்ரில்லா இருக்கும் தெரியுமா?

அப்பிடி பாக்காதீங்க. 
எங்க நிலத்த அவங்க எடுத்தாங்களோ வாங்கினாங்களோ.  அதை நான் திருப்பி எடுத்தா என்னா தப்பு? 

பத்தரத்த எல்லாம் அப்பத்தாகிட்ட காண்பிச்சா அது ஒரேடியா சந்தோஷத்துல கூத்தாடும். அதுக்காகவே மேல மேல போலி பத்திரம் தயாரிச்சு  ரிஜிஸ்டர் பண்றது வாடிக்கையா ஆச்சு 
 
ஆனா என் கூட்டாளி மொள்ளமா தன் சுய ரூபத்த காட்ட ஆரம்பிச்சான். 
போலீஸ் கேஸு அது இதுன்னு பயமுறுத்த ஆரம்பிச்சான். பாத்தேன். 
அவன போட்டுத்தள்ளறத தவிர வேற மார்க்கம் தோணல. 
அவனும் வாயத்தொறக்கமுடியாத பரலோகத்துக்கு போயிட்டான். 
அட இப்ப இங்கதான் என்னோடதான் இருக்கான் ஆனா அவனுக்கு போன ஜன்மமெல்லாம்  மறந்திடிச்சான்னா நம்பவா போறீங்க. ?

அது கெடக்கட்டும். 
அப்பத்தா சந்தோஷமா பத்தரத்தை எல்லாம் பாத்துகிட்டே செத்தது பாருங்க. அதுக்கு என்னா வெல வேணா கொடுக்கலாம். 

ஆனா விதி எங்கப்பா ரூபத்துல வந்தது. எங்கியோ கண்காணாத தேசத்தில தலைமறைவா இருந்தவரு  திடீர்னு வந்து நாந்தான் உங்கப்பன்னாரு. 
வந்தவரு கூட ஒருத்திய கூட்டி வந்து இது உன் சித்தின்னாரு. வீடு எம்பேருலதான் இருக்குது. அதனால நீ பேசாம வெளிய போயிடுன்னாரு. ஊர் நிலமெல்லாம் எம்பேர்ல மாத்தின நான் சொந்த வீட்ட மறந்து போனது விதிதானே. 
நீங்க மனசுக்குள்ள சிரிக்கறீங்கன்னு தெரியுது. 

சரி பாத்துக்கலாம்னு சொல்லி நல்ல பிள்ளையா நைச்சியமா பேசி அங்கயே தங்கிட்டேன். 
ஆனா ஒரு நாள் எனக்கு பயங்கற கடுப்பாயிடிச்சி. 
எங்கப்பன் எங்கிட்ட வந்து “ என்னடா ஊர் நெலமெல்லாம் வாய்க்குள்ள போட்டுகிட்டயாம். அதுல எனக்கு ஏதாவது குடுக்கலன்னா நான் போலீஸு....” அவரு முடிக்கறதுக்குள்ள அவரு காரியத்த முடிச்சிட்டேன். 

ஆனா என்னான்னா அது பெரிய போலீஸு கேஸாகி என்ன ஜெயில்ல போட்டு உண்டு இல்லன்னு பண்ணி ஜெயில்லயே செத்துட்டேன். அதுல என்னா பெரிய வருத்தம்னா அவ்ளோ நிலத்தை வளைச்சுப் போட்டேனே..கடேசில என் உடம்பை யாரும் வாங்கிக்கலன்னு சொல்லி எரிச்சுப்புட்டாங்க. 
என்னவோ அந்த ஜன்மத்துல புத்தி கெட்டுப்போச்சு.   
வர்ர ஜன்மத்துலயாவது நல்லா நாலு ஏக்கரா நிலம் வாங்கி செட்டிலாவனும். 

என்னாங்க சிரிக்கறீங்க? 

Chapter 2 verses 62&63

த்யாதோ விஷயான் பும்ஸ: சங்கத்தேஷூபஜாயதே
சங்காத் சஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோபி ஜாயதே. 
க்ரோதாத் பவதி சம்மோஹ: சம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம:
ஸ்ம்ருதி ப்ரம்ஷாத் புத்தி நாச: புத்திநாசாத் ப்ரணச்யதி.

No comments: