புரட்சியாளர் மாங். சூங்.கொசூமின் அவர்களின் எழுச்சி உரையின் தமிழாக்கம்.
எனது உயிரினும் மேலான சிவப்புக் கொடிப் படைத் தோழர்களே. இரத்தத்தின் இரத்தங்களே.
நாம் மறைந்திருந்து தாக்கும் படையினர் என்பதை நினைவில் கொள்ளுங்கள் தோழர்களே. நமது இனம் பெருக இதுவே நல்ல தருணம்
உங்கள் குடும்பங்களை ஒன்றிணையுங்கள். முக்கியமாக பெண்கள். அவர்கள் இல்லையேல் நமது படைக்கு எந்த உபயோகமும் இல்லை. களத்தில் பணியாற்ற அவர்களால்தான் முடியும்.
அதே சமயம் நம் குழந்தைகளைப் போஷாக்குடன் வளர்ப்பதும் நமது தலையாய கடமை என்பதை ஒருபோதும் மறவாதீர்.
அவர்கள் நமது எதிர்காலப் படைவீரர்கள் என்பதால் நல்ல இடம்பார்த்து குடிபெயருங்கள்.
வேண்டிய வித விதமான புஷ்டியான உணவும் ஒளிந்து மறைந்து வாழப் பழகுவதற்கு நெருக்கமானத் தெருக்களும் மனிதர்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளும் நமக்கும் நமது சந்ததியர்களுக்கும் மிகவும் ஏற்றவை.
சுத்தமான தண்ணீர்வசதி மிக முக்கியம்.
முக்கியமாக தன்னைச்சுற்றி இருக்கும் சமூகச் சீர்கேடான விஷயங்களைப் பற்றி கவலைப்படாதவர்கள்தான் நமது மறைமுகமான நண்பர்கள்.
இப்போதே புறப்படுங்கள். நீங்கள் அனைவரும் நகரத்தின் பல பாகங்களுக்கும் சென்று மக்களுக்கு நம் மீது பயமும் மரியாதையும் வரும்படி களப்பணியாற்றுங்கள்.
அரசாங்கத்திற்கு எதிரான இந்தப் போரில் நம்மில் பலர் மடியலாம். பலர் அடிபட்டு குற்றுயிராக வாழலாம். சிலர் மின்சாரம் தாக்கி வெடித்துச் சிதறலாம். சிலர் புகை குண்டுகளுக்கு இறையாகலாம்.சிலர் காலம் முழுக்க கம்பி எண்ணலாம். ஆனால் நூறு பேர் இறந்தாலும் நமது படைவீரர்களில் ஒரு சில பெண்கள் கடமையைச் செய்தாலும் போதும் நமது போர் வெற்றியே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஞாபகம் இருக்கட்டும். இருப்பது ஓர் உயிர் அது போவது ஒரு முறை. அதற்குள் நாம் சாதிப்பதே மனித வாழ்க்கையை தலைமுறைக்கும் மாற்றும் ஆற்றல் பெற்றது
பறந்து செல்லுங்கள் ‘டெங்கு’ கொசுப் படைகளே. உங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஓராயிரம் படை வீரர்கள் உருவாகி மனித இனத்தை படுத்த படுக்கையாக்கி மடிய விட வேண்டும். அரசாங்கத்தைத் தலை குனிய வைக்க வேண்டும்.
எழுமின் பறமின் நோய் பரப்புமின்.
இப்போது மீண்டும் ஒருமுறை ‘மான்சூன் கொசு’வின் எழுச்சி உரையை முதலில் இருந்து படித்து உணர்ச்சிவசப் படுங்கள். 😜
No comments:
Post a Comment