Pages

Search This Blog

Friday, January 18, 2019

தேடுவோமே

தேடுவோமே பொருளைத் தேடுவோமே🎶🎶


பொருளைத்தொலைப்பது எல்லோரும் செய்வது. அது ரொம்ப ஈஸி


ஆனால் தொலைந்த பொருளைத் தேடுவது ஒரு கலை. கலைமட்டுமல்ல. அதுல ஒரு கெட்டிக் காரத்தனமும் வேண்டும்

அது எல்லோருக்கும் அமையாது


வழி ஒன்று. : 


இதோ நாரயணசாமி வீட்டுக்குப் போவோம்

இந்தப் பாழாப் போன மனுஷன் எங்கப் போனாரோ?( இருங்க இருங்க தேடப் படுவது இவரை அல்ல!) ஒரு சாமான் ஒருநாள்ல ஒரு எடமா இருக்காது

நானும் சொல்லிச் சொல்லிப்பாத்தாச்சு. ரேஷன் கார்டை ட்ராவுல வைங்கோ வைங்கோன்னு. கேட்டாத்தானே. பொன்னி, ரேஷன் வாங்கறேன்னு சொல்றதே பெருசு. இப்ப விட்டா அதோட நடையக் கட்டிடுவா. எங்கப் போய்த்தொலைஞ்சார் இவர்?”


என்னம்மா தேடறே?


ம்... என்னைத்தான் தேடறேன்


கண்ணாடிபாரேன். இல்ல, கண்ணாடி போட்டுண்டு பாரேன்


நக்கல் பண்றதுக்கு ஒரு கொறச்சுலுமில்ல

ரேஷன் கார்டை எங்க வச்சு தொலைச்சேள்


வச்சதை தொலைக்க முடியுமோ? எங்க வச்சமோ அங்க தேடணும்

இந்த ட்ராவுல பார்த்தா கெடைக்கும்


 எல்லாம் நல்லாப் பாத்தாச்சு. போன ஜன்மத்து ட்ரைவிங் லைஸன்ஸ் அதுக்கு முந்தின ஜன்மத்து பேங்க் பாஸ் புக் எல்லாம் இருக்கு..ஆனா புது ரேஷன்கார்டுதான் இல்ல


என்னம்மா அப்பிடி சொல்லிட்டே. இதோ இருக்கே.


எங்க இருந்துது. ஒருமணிநேரமா தேடறேன். எந்த மூலையிலேர்ந்து எடுத்தேள்


மூலை இல்லம்மா மூளை. அதை உபயோகப் படுத்தி கண்ணத் தொறந்து பாக்கணும்

இருக்குன்னு நினைச்சு தேடணும்


சரி சரி வ்யாக்யானம் வேண்டாம். எனக்குத் தலைக்குமேல வேல இருக்கு. சட்புட்டுனு இருநூறு ரூபாய் பொன்னிகிட்ட குடுத்து அனுப்புங்கோ


( இது தேடாமலேயே பழி போட்டு பழி போடப்பட்டவர் மேல் எந்தப்பழியும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டாலும் மீசையில் மண் ஒட்டாமலும் பழியை வாபஸ் வாங்காமலும் ஸ்டேடஸ் கோ வில் விடும் கெட்டிக்காரத்தனம் !!)


வழி இரண்டு. :


தேடுகிறோம் என்பது யாருக்கும் தெரியாமல் ரகசியமாக  மன உளைச்சலை வெளிக்காட்டாமல் தேடுவது. ( இதில் பல ரிஸ்க்குகள் அவமானங்கள் வர வாய்ப்புண்டு)


காலேஜ் போகும் தேவியின் வீடு

என்னடி ஆடு திருடின கள்ளன் மாதிரி முழிக்கற. ரெண்டு நாளா நானும் பாக்கறேன்

அந்த ரூமில என்ன கொடயறே?”


அம்மா நான் சும்மா இருந்தாலே ஏதாவது நீயா கற்பனை பண்ணிக்காதேன்னு சொல்றேனில்ல


(மனதுக்குள்.. என்னோட ஹால் டிக்கட் காணோம்னு இப்போ சொன்னா அவ்வளவுதான்

ஆளாளுக்கு அறிவுறை நம்பி ஆகி வறுத்தெடுத்துவாங்களே

சாமி., பிள்ளையாரே உனக்குத் தேங்காய் உடைக்கிறேன். அரைக்காசு அம்மா உனக்காக ஒரு ரூபாய் ரகசியமா எடுத்து வைக்கறேன்

கார்த்தவீர்யார்ஜுனா கண்டுபிடிச்சுக் கொடப்பா. )


முழு இரண்டு நாள் ஆகியும் ரகசிய நடவடிக்கை பலன் தராததால் எதிரியிடம் சரணாகதி அடையவேண்டிய அவலம்


அம்மா.. என் ஹால் டிக்கட் பார்த்தியா? இங்கதான் இருந்தது. இப்ப காணோம் .. 

( குரலில் பதட்டம் தெரியக்கூடாது என்பது தேடுதல் விதி நம்பர் ஒன்று!)


இதைத்தான் ரெண்டு நாளா தேடறயா

தொலைஞ்சுடப்போறதேன்னு நாந்தான் சாமி அலமாரில வச்சேன். மொதல்லயே கேக்க வேண்டியதுதான


கிடைத்த மகிழ்ச்சியில் வார்த்தை வராமல் போகலாம்


ஆனால் அவமானத்தை துடைப்பது மிக முக்கியம். ஏம்மா, என் சாமான்களைத் தொடாதே தொடாதேன்னு எத்தன தரம் சொல்றது. கொஞ்சம் கூட தெரியாதா?


அய்யே. நல்லதுக்குக் காலமில்ல. எப்படியோ போகட்டும்னு வாசல் ஜன்னல்லயே விட்டிருக்கணும் அப்போ தெரியும்


(.. வாசலா? அட ஆமாம் ரஞ்சனாகிட்டேர்ந்து ஃபோன் வந்ததுல மறந்து போயிட்டேனோ? சமாளிடா அலர்ட் ஆறுமுகம் ... )


சரி விடும்மா. நான் படிக்கணும்


வழி மூன்று


தேடுவதுக்கு முந்தியே ,தொலைந்ததா என்பது உறுதியாவதற்கு முந்தியே , முயற்சியில் இறங்குவதற்கு முந்தியே இன்னும் பல முந்திகளுக்கு முந்தியே எஃப் ஆர் போடுவது


அய்யய்யோ ஏம்மா என்னோட ஹேண்ட் பேக் பாத்தியா?

அதுல என்னோட க்ரெடிட் கார்டுலேர்ந்து கண்மைவரைக்கும் எல்லாம் இருக்கு

காணோம போச்சுன்னா அவ்வளவுதான்


தேடிப்பாரு...


இல்லம்மா எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு

முந்தா நாள் கடைக்குப் போயிட்டு வந்து இதோ இந்த மேஜை மேலதான் வச்சேன். நேத்துகூட பார்த்தேனே

இப்ப காணோம். அய்யய்யோ எப்படி மாயமா மறையும்


கண்ணம்மா அக்கா நீங்க பாத்தீங்களா?

 நான் ஏங்கண்ணு தொடப்போறேன். நேத்து நான் லீவாச்சே


அப்பா கொஞ்சம் தேடுங்களேன்


ஏம்மா நான் ஆபீஸ் கெளம்புவேனா பேக் தேடுவேனா?


அம்மா என்னம்மா காதுலயே போட்டுக்க மாட்டேங்கற


சில நிமிடங்களுக்குப்பிறகுஅம்மா பேக் கெடச்சுருத்து.. என் அலமாரியில இருந்தது. எப்பிடி அங்க வந்தது? ஒண்ணும் புரியல

எவ்வளவு என்னை அலய விட்டது இது. ஒண்ணும் தெரியாதது மாதிரி சமத்தா உள்ள இருந்திருக்கு..“


பேக் கொஞ்சியபடி எதுவும் நடக்காத மாதிரி வெளிநடப்பு செய்வதே கெட்டிக்காரத்தனம்


( குடும்பத்தினர் எஃப் ஆரை எடுத்துக் கொள்ளவே இல்லை என்பதை ஊன்றிக் கவனிக்கவும்!!😎)



இப்படி பல பேர் பல உலகவியல் பொருட்களை பல விதமாய்தேடும் போது வெகு சிலரே ஆத்மாவைத்தேடுகிறார்கள் அதிலும் ஒரு சிலரே ப்ரஹ்மத்தை அறிகிறார்கள் என்கிறார் கிருஷ்ணபரமாத்மா கீதையில். 😀😀




No comments: