Pages

Search This Blog

Tuesday, February 12, 2019

kalyanam

மாறிய கல்யாணங்கள் மாறாத வைபவங்கள்.


1950


என்னோட ஒண்ணுவிட்ட நாத்தனார் பையனுக்கு உங்காத்து வனஜாவைப் பாக்கலாம்னு தோண்றது. அண்ணாவை ஒரு வார்த்தைக் கேட்டுட்டு சொல்லுங்கோ

நிச்சயமா! நல்ல பையனாச்சே. இந்த காலத்துல த்ரிகால சந்த்யாவந்தனமும் சமிதா தானமும் பண்ற பையனைப் பாக்றது அபூர்வம்னா. வனஜா கொடுத்து வச்சவோ


நம்ம வனஜா மாத்தரம் என்ன? குனிஞ்ச தலை நிமிராம அத்தனை கைக்காரியமும்பண்றாளே. பதினாறு வயசுக்கு அவ வளர்த்தி.. அப்பிடியே அம்பாள்மாதிரின்னா இருக்கா.”


அடுத்த வாரம் மாசி பொறந்து ஒரு நல்ல நாள்ல கல்யாணத்தை வச்சுக்கலாம்.”  


அக்கா..,!மாப்பிள்ளை ஆத்துக்காரா பக்கத்து ஊர்தானாலும் கல்யாணத்துக்கு நாலுநாள் முன்னாடியே வந்துடுவா. எங்காத்துல வேண எடம் இருக்கு. அது போக தெருவே நம்மளதுதான்

எவ்ளோ பேர் வேணாலும் தங்கலாம். சாப்பாடு நம்ம நாணா பாத்துப்பான்

மடிசமையல் சுப்பம்மா பாட்டியும் அவளோட பேத்தியும் ஜம்னு பண்ணிடுவா


ஜவுளி வகையறா செட்டியார்கடையில இன்னிக்கே கேட்டாக்கூட கொண்டுவந்து எறக்கிடுவார்


நாதஸ்வரம் அது இதுன்னு ஜமாய்ச்சுடுவோம்

அப்போ வர்ர பதினைந்தாம் நாள் கல்யாணம்.”


பீ பீ..பீ..பீபீ ..பீஈ பிபிபீ


1980


பொண்ணுக்கு ஜாதகம் எடுத்துட்டேன். தெரிஞ்சவா ஆத்துப் பையன் யாராவது இருந்தா சொல்லுங்கோ

நம்ம கல்யாணியோட  ஓர்பொடி பையன் திருச்சியில ரயில் வேயில இருக்கான். நல்ல பையன். ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. க்வார்டர்ஸ் குடுத்துருக்கா. அரண்மனையாட்டம் வீடு

அப்பா ரிடயர்ட். அம்மா ஏதோ ஸ்கூல்ல டீச்சர். பிக்கல் பிடுங்கல் இல்ல. “


ஜாதகம்... பொருத்தம்..


எனக்குத்தெரிஞ்ச ஜோசியர் கிட்ட பாரு. சரின்னா மேல பேசலாம்


ஜாதகம் பொருந்திடுத்து. பையன் பொண்ணப் பாக்கணும். அவா எப்போ வர்ரான்று கேட்டுச்சொல்லுங்கோ



வாங்கோ வாங்கோ. இந்த பஜ்ஜி ஸொஜ்ஜி எல்லாம் எம் பொண்ணு பண்ணது

ஸாமஜ வரகமனா பாடினா இன்னிக்கெல்லாம் கேட்டுண்டே இருக்கலாம். 21 வயசுதான்னாலும் எல்லாம் தெரியும். ஆத்துக்கு ஏத்த பொண்ணா இருப்பா

BA படிச்சுருக்கா டைப்ரைட்டிங் ஷார்ட் ஹேண்ட் எல்லாம் ஓரளவு தெரியும்

பத்து பேருக்குண்ணாலும் நிமிஷமா சமைச்சுடுவா.“


பொண்ணு ஒகே

நகை நட்டு வரதட்சிணை எல்லாம் நாங்க கேக்கறதுக்கு மேலேயே செய்வேள் கல்யாணம் சத்திரத்துல பண்ணுங்கோ. எங்க சைடு மனுஷாஜாஸ்தி. எல்லாரும் தங்கறா மாதிரி பெரிய சத்திரமா பாருங்கோ

ஜவுளி எல்லாம் காஞ்சிபுரத்துலயே வாங்கிடுங்கோ

மாப்பிள்ளைக்கு கோட்டு ஸூட்டு பட்டு வேஷ்டி 

பொண்ணுக்கு கூறைப்பொடவை எல்லாம் பெரிய ஜரிகையா வாங்கிடுங்கோ


நாதஸ்வரத்தோட பேண்ட் வாத்தியமும் வச்சுருங்கோ


சமையல் நல்ல சமையல்காராளா ஏற்பாடு பண்ணுங்கோ 

 

பீபீ பீஈ பீபீ 


சம்பந்தியாத்துல எல்லாரும் தாம்பூலம்  வாங்கிண்டேளா. ரெண்டு நாள் போனதே தெரியல


எங்களுக்கும் பரம த்ருப்தி போயிட்டு வரோம்


2019 


ஏண்டி இப்பவே 28 வயசாறது கல்யாணம்னாலே எரிஞ்சு விழறே. எங்களுக்கும் வயசாறது. சட்டுப்புட்டுனு சரின்னு சொல்லு

மேட்ரிமோனி பாத்து பாத்து கண்ணு பொட்டையானதுதான் மிச்சம்

அதுலேர்ந்து ரெண்டு பையனை செலக்ட் பண்ணியிருக்கேன். ஒர்த்தன் அட்லாண்டால இருக்கான். இன்னொருத்தன் சியாட்டில்

சிகரெட்லாம் பிடிப்பானாம். ஆனா என்ன? இந்தகாலத்தில இதெல்லாம் பாத்தா ஆகுமா?


பையனோட நீ பேசிப்பாரு. நீ ஓகேன்னா்அவா அம்மா அப்பாவோட பேசலாம்



ஆறு மாதம் கழித்து...


ஏண்டி ஆறுமாசமா சாட் பண்ணிட்டு இப்போ திடீர்னு அவன் ஒத்து வராதுன்னா என்ன அர்த்தம்?

என்னது அந்த இன்னொரு பையனோட பேசறியா? அது சரி...  


இன்னொரு ஆறு மாதம் கழித்து...


அந்த அட்லாண்டா பையனை இவ ஓகேன்னுட்டாள் அவன் மே மாசம் வரும் போது நேர்ல பாத்துட்டு அப்பறமா கன்ஃபர்ம் பண்ணுவானாம்

 

அப்பாடா ஒரு வழியா சரின்னுட்டாள். அவனும் பாத்தா நல்லவனாத்தான் தெரியறான். அம்மா அப்பா எல்லாம் எங்கியோ இருக்கப் போறா


அடுத்த வருஷம் கல்யாணம்

இப்போலேர்ந்தே மண்டபம் பாக்கணும். ஏசி ஹால். வரவா தங்க ஹோட்டல் ரூம். போக வர கார் ட்ராவல்ஸ்

ரெண்டு மூணு விதமா பத்திரிகை அடிக்கணும்


பட்டுபொடவை வாங்க பொட்டிக் பொட்டீக்கா அலையணும். அப்புறம் டிசைனர் ப்ளவுஸ் தைக்கணும். மாப்பிள்ளைக்கு கோட்டு ஸூட்டு பட்டு வேஷ்டி காஷ்மீர் கோட்டு பைஜாமா அது இது. அப்பறம் கேடரிங்க் ஞானாம்பிகா கிட்ட கெஞ்சிப் பேசி ஒத்துக்க வைக்கணும்

வரவாளுக்கு ரிடர்ன் கிஃப்ட் வாங்கணும். ஈவண்ட் மேனஜ்மெண்ட் காரா கிட்ட பட்ஜெட் எகிறாம அதே சமயம் வரவா ஆஹா ஓஹோங்கறா மாதிரி கல்யாணம் பண்ணனும்னு கறாரா சொல்லணும்


நாதஸ்வரம், பேண்ட், செண்டை வாத்யம், லைட் ம்யூசிக் அது போக ரிஸப்ஷனுக்கு புதுமையா ஃப்யூஷன் ம்யூசிக்

பார்லருக்கு ஆறுமாசம் பேக்கேஜ் போட்டு முகத்தை சரி பண்ணனும்

ஒரு வருஷம் போறாது போலிருக்கே!


ஏதோ இந்த மட்டுக்கும் இப்பவாவது கல்யாணத்துக்கு ஒத்துண்டாளே

 பீபீ பீ..பிபி...


என்னமோ கல்யாணம் பண்ணா! போன வருஷம் நம்ம நிர்மலா ஆத்துக் கல்யாணம் மாதிரி வராது. இருந்தாலும் ஓகே

சம்பந்தி நாங்க வரோம்

பேஷா போயிட்டு வாங்கோ


2030

உஸ் ஹப்பா... இப்பவே கண்ணக் கட்டுதே...🙄





No comments: