Pages

Search This Blog

Thursday, September 02, 2021

ஸ்யமந்தகமணிஉபாக்யானம்

 

#ஸ்யமந்தகமணிஉபாக்யானம் ( பாகவத உப கதை)
By Rajineel Neelakant

நாம் பல கதைகள் படிப்போம் பலது மறந்து போய்விடும் சிலது கொஞ்சம் ஞாபகம் இருக்கும். ஆனால் ஒன்றிரண்டு கதைகள் பச்சக் என்று ஆணி அடித்தாற் போல் மனதை விட்டு அகலவே அகலாது.

ஸ்யமந்தகமணி உபாக்யானம் என்னும் மகாபாரத உப கதை அப்படிப் பட்டது
அதை தெய்வத்தின் குரலில்  மஹா பெரியவா சொல்வது இன்னும் நிறைய திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த மர்மக் கதைபோல நம்மை நாற்காலி நுனிக்குக் கொண்டு வந்து விடும்.

இதோ இன்னும் ஒரு வாரத்தில் பிள்ளையார் சதுர்த்தி வரப்போகிறது. அதற்கும் இந்த க்ருஷ்ணர் கதைக்கும் என்ன சம்பந்தம்?

அது என்ன ஸ்யமந்தக மணி? இந்தக் கதையில் அது ஏன் க்ருஷ்ணபரமாத்மாவை பாடாய்ப் படுத்தியது?

மகாபாரதகாலத்தில் க்ருஷ்ணாவதார சமயத்தில் ராமாயண கால ஜாம்பவான் எங்கு வந்தார். அவருக்கும் க்ருஷ்ணருக்கும் என்ன உறவு?

இதில் சதுர்த்தி அன்று சந்திரனுக்கு அர்க்யம் விடும் பழக்கம் ஏன் வந்தது ?

இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமா?

வாருங்கள் கண்டு பிடிப்போம்.
By Rajeswari Neelakantan




Part 1
#ஸ்யமந்தகமணிஉபாக்யானம்
By Rajineel Neelakant

இந்தக் கதை நடக்கும் காலம் துவாபர யுகம்.
க்ருஷ்ணனுக்கும் ருக்மிணிக்கும் கல்யாணம் ஆயாச்சு. 
த்வாரகாவில் அவர்கள் இருக்கும் காலத்தில் அதே ஊரில் சத்ராஜித் என்றும் ப்ராசேனன் என்றும் இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களும் க்ருஷ்ணனின் யாதவகுலத்தவர்கள்தான்.
இந்த சத்ராஜித் சூரிய உபாசகன். (நமது ஆதிசங்கரர் ஸ்தாபனம் பண்ணிய ஆறு வகையான உபாஸனைகளில் சூரியனையே முழுமுதற் கடவுளாக வழிபடுவது சௌரம்).
சத்ராஜித் ரொம்ப பக்தியோடு சூரிய உபாசனை பண்ணியதில் சூரிய பகவானே அவன் எதிரில் வந்து வரம் கொடுக்க முன்வந்தார்.
அப்போது அவன் சூரியனிடம் இருந்த ஒரு அதிசயமான ச்யமந்தக ரத்தினத்தை வரமாகக் கேட்டான்.
சூரியனும் சந்தோஷமாக அதை அவனுக்குக் கொடுத்தார். அதன் பெருமைகளை அவர் விளக்கின போது
“இதோ பார் சத்ராஜித், இந்த மணி ஒரு நாளைக்கு எட்டு பாரம் தங்கம் கொடுக்கும். அது இருக்கும் இடத்தில் சோகமோ வியாதியோ இருக்காது. ஒளி மயமான இந்த மணி  ஸ்ரேயஸை கொடுக்கும்.

ஆனால் இதை வைத்திருப்பவன் உடலாலும் மனதாலும் ரொம்ப ஆசாரமாக இருக்கணும். பொறாமையோ, கோபமோ ,மனதில் எந்த விதமான கெட்ட எண்ணமோ. இல்லாமல் இருக்கணும். அப்படி ஏதாவது இருந்தால் இந்த மணியே அவன் அழிவுக்கு காரணமாயிடும்” என்று நல்லது ,பொல்லாதது இரண்டையும் சொல்லி அவனிடம் கொடுத்து ஆசீர்வாதம் பண்ணிவிட்டு மறைந்து போனார்.

சத்ராஜித்துக்கு பெருமை பிடிபடவில்லை. "ஆஹா நம்பளை விட அதிர்ஷ்டசாலி யார் இருக்க முடியும். இந்த மணி என்னிடம் இருக்கும் வரை கவலையே இல்லை" என்று நினைத்த படியே ஊருக்குள் வந்தான். அவன் கழுத்திலிருந்த ஸ்யமந்தக மணியோட பளபளப்பு  கோடி சூர்யப்ரகாசமாக ஆச்சர்யமாக இருந்தது.
எல்லோரும் அதை அதிசயமாக பார்க்கப் பார்க்க அவனுக்கு பெருமை பிடிபடவில்லை.

வீட்டிற்கு வந்து இரண்டுநாளில் அந்த மணியினால் தினம் எட்டு பாரம் தங்கமும் , மனம் நிறைய சந்தோஷமுமாகக் கழிந்தது.

அப்போது அந்த மணியைப் பற்றியும் சத்ராஜித்திடம் அது வந்த கதையைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொள்ள க்ருஷ்ணபரமாத்மா அவன் வீட்டிற்கு வந்தார்.

க்ருஷ்ணனைப் பார்த்ததுமே சத்ராஜித்துக்கு லேசாக பயம் வந்துவிட்டது. என்னடா இது இவர் ஏதாவது எடக்கு மடக்காக கேட்டால் என்ன சொல்வது என்று மனதில் நினைத்தபடியே,” வரணும் வரணும். உங்கள் பாதம் பட நான் என்ன புண்ணியம் செய்தேனோ? சொல்லியிருந்தால் நானே வந்திருப்பேனே,” என்று பொய்யான பவ்யத்தோட சத்ராஜித் அழைத்ததை பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டார் க்ருஷ்ணர். அவருக்கா தெரியாது ,அடுத்தவர் மனதில் இருப்பது!?

“ சத்ராஜித், உன்னிடம் ஏதோ ஒரு அதிசயமான மணி இருக்காமே. ஊரெல்லாம் பேச்சா இருக்கே. அதை பார்த்துவிட்டுப் போலாம் என்றுதான் வந்தேன். அதை நான் பார்க்கலாமா?” என்றார்.
சத்ராஜித் மனதிற்குள், “ அடடா, பயந்தது போலவே ஆயிடுத்தே” என்று நினைத்தபடியே
“ ஆமாம் க்ருஷ்ணா. இதோ அந்த மணி. “ என்று அதைக் காண்பித்தான்.
அதன் விசேஷங்களையும் அதிசயங்களையும் கேட்ட க்ருஷ்ணர் , “ ரொம்ப சந்தோஷமான விஷயம்தான். உன்னுடைய பக்தியின் மகிமைதான் இது. ஆனால்....” என்று இழுத்துமே சத்ராஜித் வயற்றல் புளி கரைத்தது. 

அடுத்து க்ருஷ்ணர் கேட்ட விஷயம் அவன் பயந்தபடியே ஆச்சே என்று சத்ராஜித் நினைத்தான்.

அப்படி என்ன கேட்டார் க்ருஷ்ணர்? சத்ராஜித் ஏன் அதைக் கேட்டு லேசான கோபமும் பயமும் எரிச்சலும் ஆனான்?
.
By Rajeswari Neelakantan



Part 2
#ஸ்யமந்தகமணிஉபாக்யானம்
Rajineel Neelakant

க்ருஷ்ணர் மெதுவாக சத்ராஜித்திடம்,” அப்பா இத்தனை உசத்தியான மணி உன் ஒருத்தனுக்கு உபயோகமா இருப்பதை விட நம்ம ராஜாகிட்ட இருந்தா  இந்த நாடே ஸுபிக்ஷமா இருக்குமே. அதனால இதை ராஜாகிட்ட ஒப்படைக்கறதுதான் உசிதம். ஸாஸ்த்ரபடியும் உயர்ந்ததாக எதுவானாலும் அது ராஜாவையே சேரும் இல்லியா? அதனால...”  என்றாரோ இல்லையோ உடனே சத்ராஜித்துக்கு தன் சந்தேகம் சரிதான். இவர் தனக்கு அந்த மணி வேணும் என்பதை நாசூக்காக ராஜா அது இது என்று சாஸ்திரம் பேசுகிறார். பலராமர்தான் அண்ணா என்றாலும் அறிவிக்கப்படாத ராஜா இவர்தானே என்று தோன்றிவிட்டது.

க்ருஷ்ணர் கேட்டதற்கு பதில் எதுவும் சொல்லாமல் பேச்சை மாற்றி வேற ஏதேதோ சொல்லி அவரை அனுப்பிவிட்டான். க்ருஷ்ணரும், சரி நாம சொல்றதை சொல்லியாகிவிட்டது. இனி சத்ராஜித் என்ன பண்ணினாலும் அது நமக்கு சம்பந்தமில்லை என்று கிளம்பிப் போய்விட்டார்.

அவர் கிளம்பினதும் சத்ராஜித்திற்கு கொஞ்சம் பயம், நிறைய சந்தேகம் எல்லாம் வந்துவிட்டது.

ஆஹா! க்ருஷ்ணர் நினைத்தால் பேச்சு வார்த்தை இல்லாமலேயே ஆட்களை அனுப்பி அரசாங்க உத்தரவு என்று சொல்லியே மணியை அபகரிக்கலாம். இல்லையென்றால் நம்மை விடாமல் நச்சரித்து நாமே இந்தாருங்கள் என்று கொடுக்கும்படி செய்யலாம்.  அவரை விரோதித்துக் கொண்டால் நம்மால் இந்த துவாரகையில் நிம்மதியாக இருக்க முடியுமோ? நிச்சயம் முடியாது.
என்ன பண்ணலாம்?

இப்படியெல்லாம் யோசித்த போது அவனுக்கு ஒரே வழிதான் தோன்றியது. நம்மை விட நமது தம்பி ப்ராசேனன் பலசாலி. புத்திசாலியும்கூட.  பேசாமல் கொஞ்ச நாளைக்கு இந்த ச்யமந்தக மணியை அவனிடம் கொடுத்து வைப்போம். க்ருஷ்ணர் கேட்டால் என்கிட்ட இல்லை என்று சொல்லி தப்பித்து விடுவோம் என்பதுதான் சரியான வழி என்ற முடிவுக்கு வந்தான்.
( அவனுக்கு மனதில் தப்பிதமான எண்ணம் தோன்றினதுமே அந்த மணி அவனைவிட்டு போக ஆரம்பித்ததைப் பாருங்கள்)

நாம் சொல்வதைச் சொல்லியாகிவிட்டது என்று  நினைத்துக் கொண்டு
சத்ராஜித் வீட்டைவிட்டு க்ருஷ்ணர் கிளம்பினாலும் இதனால் அவருக்கு பல சந்தேகபழிகள், சம்பந்தமில்லாத பழிகள் வரப்போகிறது என்பதை அறியாமல் போனதால் வரப்போகிற விபரீதங்கள் என்னென்ன? அதனால் படப்போகும் கஷ்டங்கள் என்னென்ன? அதற்கு பரிகாரமாக ஏதாவது நடக்குமா? நல்லது ஏதாவது நடக்க வாய்ப்பிருக்கிறதா?
.
By Rajeswari  Neelakantan

Part 3
#ஸ்யமந்தகமணிஉபாக்யானம்
By Rajineel Neelakant

ப்ராசேனனிடம் போய் சத்ராஜித் , “ தம்பி இந்த க்ருஷ்ணன் ரொம்பப் பொல்லாதவன். இந்த ச்யமந்தகமணியை எப்படியாவது என் கிட்டேர்ந்து அபகரிக்கணும் என்கிற நோக்கத்தோடு பேசவந்தான். நான் என்னவோ சொல்லி சமாளித்து அனுப்பி விட்டேன். இனிமே இது என் கிட்ட இருந்தால் என்னவாகுமோ என்னவோ. அதனால இதை நீயே வைத்துக்கொள். சண்டை போட்டாவது க்ருஷ்ணனிடமிருந்து இதை காப்பாற்றிக் கொள்”, என்று சொல்லி  மணியைக் கொடுத்துவிட்டுப் போனான்.

இப்போது அது ப்ராசேனனுக்கு வினையாக வந்தது.
அவன் அடுத்த நாள் காட்டுக்கு வேட்டையாட தன் பரிவாரங்களோடு போனான். எங்கே அவன் வீட்டில் இல்லாத நேரம் அந்த மணி  திருட்டுப்்போயிடுமோ என்ற பயத்தால் கழுத்தோடவே  ச்யமந்தக மணியையும் போட்டுக் கொண்டுதான் போனான். (கூடவே அதற்காகவே க்ருஷ்ணனையும் அழைத்துக் கொண்டு போனான் என்பதும் ஒருசிலரின் கருத்து.)
போன இடத்தில் சரீர சுத்தம் சரியாக காப்பாற்ற முடியவில்லை. கை கால் அலம்ப வழியில்லாமல் போனது. மேலும் மனசிலும் கள்ளம் புகுந்ததாலும் மணி தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது.

வேட்டைக்கு போன ப்ராசேனன் தன் படையாட்களிடமிருந்து பிரிந்து வழி தடுமாறி ரொம்ப தூரம் காட்டுக்குள்ளேயே போய் விட்டான்.
அப்போது பார்த்து சிங்கம் ஒன்று அவன் மேல் பாய்ந்து கொஞ்ச நேர சண்டைக்குப் பிறகு ப்ராசேனனை அந்த சிங்கம் கடித்துக் குதறியதுமில்லாமல் சாப்பிட்டும் விட்டது.
( இதெல்லாம் மணியின் விதிமுறைகள் பின்பற்ற படாததால் வருகின்ற அனர்த்தங்கள்)

அவன் படையாட்களும் மற்ற வேலையாட்களும் ப்ராசேனன் வெகு நேரமாகியும் காணவில்லை என்றதாலும்  இருட்ட வேறு ஆரம்பித்தது என்பதாலும் வீட்டிற்குப் போய் சத்ராஜித்திடம் தகவலை தெரிவித்தார்கள்.

உடனே சத்ராஜித் நிச்சயமே பண்ணிவிட்டான். “கட்டாயமாக இது க்ருஷ்ணனுடைய வேலையாகத்தான் இருக்கும். கம்சனையே கொன்றவனாயிற்றே. அதையும் தவிர பூதனா சகடாசுரன் பகாசுரன் என்று எத்தனை பேர் அவன் கையால் மாண்டவர்கள். இந்த மணிக்காக ப்ராசேனனைக் கொல்வது அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை. இதை நான் சும்மா விடப் போவதில்லை. ராஜாவிடம் போனால் நீதி கிடைக்காது. ஊரெல்லாம் அவனுடைய இந்த மாபாதகத்தைச் சொல்லி அவன் பேரைக் கெடுக்கத்தான் போகிறேன்.” என்று நினைத்தவன் நேராக ஊர் மக்கள் எல்லோரிடமும் க்ருஷ்ணன் வந்து மணியைக்கேட்டது, தான் மறுத்தது, க்ருஷ்ணனுக்குப் பயந்து மணியை ப்ராசேனனிடம் கொடுத்தது, கழுத்தில் மணியுடன் வேட்டைக்குப் போன ப்ராசேனன் திரும்பாதது எல்லாம் சொல்லி “இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் இது வேற யார் செய்திருக்க முடியும். நிச்சயம் க்ருஷ்ணன்தான் ப்ராசேனனைக் கொன்று மணியைத் திருடிவிட்டான்” என்றதும் ஊர் ஜனங்கள் கொஞ்சமும் யோசிக்காமல் அவன் சொன்னதை நம்பி, ஆமாம்மா!சின்ன வயதில் வெண்ணை திருடினவன்தானே. இப்போது மட்டும் அந்தப் பழக்கம் எப்படிப் போகும்? அப்போது சின்ன திருட்டாக வெண்ணை. இப்போது பெரிய திருட்டாக மணி, என்று கூடி கூடிப் பேசியதில் விஷயம் க்ருஷ்ணன் காதுக்கும் எட்டியது.

இது என்னடா வம்பாகிப் போனது? இப்படி ஒரு வீண் பழி என் மேல் விழுந்துவிட்டதே. இதை எப்படி துடைப்பது? நாமே திரும்ப காட்டுக்குப் போய் நடந்த உண்மையைத் தெரிந்து கொண்டாலொழிய இந்த ஊர் நம்மை ஏசுவதை நிறுத்தாது என்று முடிவு செய்து தன் ஆட்களோடு சத்ராஜித்தின் ஆட்களையும் சேர்த்துக் கொண்டு காட்டுக்குள் போனார்.

போனவர் என்ன ஆனார்? மணியைக் கண்டுபிடித்தாரா? இல்லை வேறு ஏதாவது எதிர்பாராதது நடந்ததா?
எல்லாம் நாளைக்கு
By Rajeswari Neelakantan
29/08/2019

Part 4
#ஸ்யமந்தகமணிஉபாக்யானம்
By Rajineel Neelakant

க்ருஷ்ணர் காட்டுக்கு போனார். நாள் முழுவதும் தேடியும் அவரால் ப்ராசேனனை கண்டுபிடிக்க முடியவில்லை. சாயங்கால வேளையும் வந்துவிட்டது. லேசாக இருட்டி கொஞ்ச நேரமும் ஆகி விட்டது. நேரத்தைக் கணிப்பதற்காக தலையைத்தூக்கி ஆகாசத்தில் சந்திரனுடைய  இருப்பைப் பார்த்தார். அன்று நாலாம் பிறை. புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி. ( கதையில் இதன் முக்கியத்துவத்தை பின்னால் சொல்கிறேன். இந்த திதியை மாத்திரம் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.)
அடடா! இப்படியே திரும்பிப் போனால் சத்ராஜித் சந்தேகப் படுவது நிஜம் என்றே ஆகிவிடுமே. பழி ஓர் இடம் பாவம் ஓரிடம் என்பது எவ்வளவு  உண்மை, என்றுநினைத்தபடியே சரி இன்னும் கொஞ்சதூரம் போய்ப் பார்ப்போம். ஏதும் துப்பு கிடைக்கவில்லை என்றால் ராஜா கொடுக்கும் தண்டனைக்கு ஒப்புக்கொள்ள வேண்டியதுதான் என்றெல்லாம் யோசித்தபடியே மேலே காட்டிற்குள் போனார்.

கூட வந்த சத்ராஜித் ஆட்களுக்கு எங்கே க்ருஷ்ணன் தங்களையும் அடித்துப் போட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது மாதிரி
போகத்தான் திட்டம் போடுகிறாரோ்என்று சந்தேகம் வலுத்தது.ஆனாலும் பாதியில் திரும்பினால் சத்ராஜித் கேட்டால் பதில் சொல்ல வேண்டுமே என்ற பயத்தில் கூடப் போனார்கள்.

திடீரென்று க்ருஷ்ணர்,” ஆஹா! இதோ ப்ராசேனனின் வில்லும் வாளும். இதோ அவனுடைய கிழிந்துபோன உடைகள். அட டா இது என்ன? இங்கு சிங்கத்தின் பாத தடையங்கள் இருக்கிறதே!” என்று ஏதோஒரு தடயமாவது கிடைத்ததே என்ற ஆச்சர்யமும் அதே சமயம் ஐயோ பாவம் ப்ராசேனன் சிங்கம் அடித்து இறந்தே போய்விட்டானே என்ற பச்சாதாபமும் ஒரு சேர உரக்கக் கூவினார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த சத்ராஜித்தின்ஆட்களுக்கு உண்மை உரைத்தது. அடப் பாவமே வீணாக இவர் மேல் பழியைப் போட்டாரே நம்ப எஜமானர் என்று நினைத்தனர். ஆனால் அதில் ஒருவன் மாத்திரம் “ அதெல்லாம் சரி. மணி எங்கே?” என்றதும் விலகிப் போன சந்தேகப் பேய் மீண்டும் எல்லோர் மனதிலும் ஏறிக்கொண்டது.
க்ருஷ்ணரும் அதைத்தான் தேடிக்கொண்டிருந்தார். கொஞ்சதூரம் சிங்கத்தின் பாத அடையாளங்களைத் தொடர்ந்ததும் அந்த அரை இருட்டில் அழுத்தமான நல்ல பல சாலியான கரடியின் கால்தடங்களைப்பார்த்தார். சிங்கதிற்கும் கரடிக்கும் த்வந்த்வ யுத்தம் நடந்த அடையாளமும் சற்று தூரத்தில் இறந்து போன சிங்கத்தின் உடலும் இருந்ததையும் எல்லோரும் கண்டனர். மேலே போனதில் கரடியின் கால் தடங்கள் மாத்திரம் அழுந்தப் பதிந்து காட்டிற்குள் போவதும் தெரிந்தது.

உடனே க்ருஷ்ணர் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்குப் போட்டு,” இதோபாருங்கள். சிங்கம் ப்ராசேனனை அடித்துப் போட்டுவிட்டு பளபளவென்று ஜொலித்த மணியை எடுத்துப் போயிருக்கும். ஆனால் ஏதோநல்ல பலசாலியான கரடி ஒன்று சிங்கத்தை அடித்துப் போட்டுவிட்டு அந்த மணியை தூக்கிக் கொண்டு போயிருக்கும். இன்னும் கொஞ்சம் தூரம் இந்தக் கரடியின் தடத்தோடேயே போனால் மேலே ஏதாவது துப்பு கிடைக்கும். யாராவது என்னோடு வாருங்கள். போவோம்,” என்றார்.
எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டனர். க்ருஷ்ணரின் ஆட்களுக்கே இப்போது சந்தேகம் லேசாக தலைதூக்கியது. ஆனாலும் சத்ராஜித்ஆட்களும் கூட வர எல்லோருமே ஒன்றாக கரடியின் அடிச்சுவடை தொடர்ந்து க்ருஷ்ணரோடு போனார்கள்.

அந்த காலடிச்சுவடு ஒரு பெரிய குகையின் வாசலில் போய் முடிந்தது. அந்த குகையின் வாசல் முக்கால் வாசி மூடியிருந்தாலும் ,உள்ளே பளீர் என்று வெளிச்சமாக இருப்பது நன்றாகத் தெரிந்தது.
அதோடவே இனிமையான மெல்லிய குரலில் ஒரு பெண்ணின் பாட்டுச் சத்தமும் கேட்டது.

சிம்ஹ: ப்ரேசனம் அவதீத்
சிம்ஹோ ஜாம்பவதா ஹத:
சுகுமார மா ரோதி
தவஹ்யேஷ ச்யமந்தக:

இதுதான் அந்தப் பாட்டு.

அந்த குகை யாருடையது?
உள்ளே பளீர் வெளிச்சத்திற்கு என்ன காரணம்?
உள்ளே கேட்ட பெண்ணின் குரல் யாருடையது?
அந்தப் பாட்டில் ஒளிந்திருந்த கருத்து என்ன?
குகைக்குள் க்ருஷ்ணர் போனாரா?
என்ன நடந்தது?
.
By rajeswari neelakantan

#ஸ்யமந்தகமணிஉபாக்யானம்
Part-5
By Rajineel neelakant

அந்த குகைக்குள்ளே  இருந்தது ஜாம்பவான் என்ற ராமாயண காலத்து கரடி,. அவர்.... அவர் எப்படி இந்த குகைக்குள்? ராமருடைய காலம் திரேதாயுகம். கிருஷ்ணர் இருந்ததோ துவாபரயுகம் .ஜாம்பவான் எப்படி இங்கு இந்த குகைக்குள் இருக்க முடியும் ?
யோசியுங்கள்!

....
(அது ஏனென்றால் ஹனுமார், விபீஷணன், பரசுராமர் போன்ற சிரஞ்சீவிகளில் அவரும் ஒருவர்.)

கிருஷ்ணர் அந்த குகைக்குள்ளே நுழைந்து பார்த்த பொழுது, ஒரு அழகிய இளம்பெண் ஒரு சிறு குழந்தையை தொட்டிலில் இட்டு ஆட்டிக்கொண்டு  மேற்கண்ட பாடலை பாடிக்கொண்டிருந்தார். உள்ளே நுழைந்ததும் அவள் சிறிது திடுக்கிட்டுவிட்டாலும், நாணத்துடன் அவரைப்பார்த்து யாரென விசாரித்ததில் கிருஷ்ணர் இந்த ஸ்யமந்தகமணி கதையைச் சொல்லி அதனால் தனக்கு ஏற்பட்ட   வீண் பழியை துடைக்கவே இந்த குகையை தேடி வந்ததையும் சொன்னார்.

உடனே அந்த இளம்பெண் ,  “க்ருஷ்ணா,நான் ஜாம்பவதி. ஜாம்பவான் எனது தந்தை. இதோ இந்த சிறு குழந்தை எனது தந்தைக்கு வெகு நாட்களுக்குப்பின் பிறந்த மகன். இந்த ஸ்யமந்தகமணி அவனுக்காக எங்கள் அப்பா சிங்கத்துடன் சண்டையிட்டு கொண்டு வந்தது. இப்போது அதை நீங்கள் திரும்பி கேட்டால்  நிச்சயம் தரமாட்டார். அவர் இப்போது உள்ளேதான் தூங்கிக்கொண்டிருக்கிறார். எனவே நீங்கள் இதை இப்பொழுதே அப்பா எழுந்து வருவதற்குள் எடுத்துச் சென்று விடுங்கள்” என்றதும் ,கிருஷ்ணர் ஹாஹாஹா என்று பெரிதாக சிரித்துவிட்டு “ஏற்கனவே இருக்கும் பழி  போதாது என்று இந்த திருட்டுப் பட்டம் வேறு எனக்கு தேவை இல்லை. உன் அப்பா வரட்டும் அவருடன் சண்டையிட்டே நான் இந்த மணியை எடுத்துச் செல்லவும் தயார்”, என்று கூறியபடி தனது சங்கை எடுத்து பூம் பூம் என்று ஊதினார்.

சத்தம் கேட்டு வெளியே வந்த ஜாம்பவான் கடும் கோபத்துடன் கிருஷ்ணருடன் 21 நாட்கள் யுத்தம் செய்தார் .  ஆனால் எவ்வளவோ கடுமையாக யுத்தம் செய்தாலும், மனதில் ஏதோ ஒரு இனம் புரியா மகிழ்ச்சி பொங்குவதை உணர்ந்து, சற்றே யுத்தத்தை நிறுத்தி ,தன்னுடன் சண்டைபோடும் கிருஷ்ணரை உற்றுப் பார்த்ததில், அவர் யார் என்பது புரிந்தது. தான் திரேதாயுகத்திலிருந்து  பக்தியுடன் ஆராதித்துவரும் தனது ராமரே தான் இன்று கிருஷ்ணராக தன்னுடன் கட்டிப்பிடித்து யுத்தம் புரிந்திருக்கிறார் என்பது தெரிந்ததும் அவர் கிருஷ்ணரின் காலில் விழுந்து பக்தியால் பெருகிய தனது கண்ணீருடன் வணங்கினார். 

ச்யமந்தகமணியோடு தனது புத்திரியாகிய ஜாம்பவதி என்கிற நாரீமணியையும் அவருக்கு சமர்ப்பணம் செய்து ஆசீர்வதித்து அனுப்பினார்.

(ஜாம்பவான் ராமாவதாரத்தின் போது ராமரை தொட்டுப்பார்க்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டாராம்.  ஆனால் புசுபுசுவென்று இருக்கும் தனது உடம்பால் அவரை எப்படி  தொடுவது என்பதால் அந்த ஆசையை ராமரிடம் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு மனதுக்குள்ளேயே தனது ஆசையை பூட்டி வைத்துக் கொண்டாராம். அதை உணர்ந்துகொண்ட ராமர், ராமாவதாரத்தில் சீதையைத் தவிர வேறு ஒருவரையும் தொடுவதில்லை என்ற பிரதிக்ஞை காரணமாக அதை நிறைவேற்றாத போதும் இந்த கிருஷ்ணாவதாரத்தில் ஜாம்பவானை 21 நாட்கள் தனது ஸ்பரிசம் கிடைக்கும் படி மல்யுத்தம் செய்து அவருடைய ஆசையை நிறைவேற்றினாராம்.)

பின்னர் ச்யமந்தகமணியை எடுத்துக்கொண்டு சத்ராஜித்திடம் கொண்டு சேர்த்து விட்டார்.சத்ராஜித் கிருஷ்ணர் மேல் தான் சுமத்திய  வீண் பழியை நினைத்து வருந்தி தனது பெண்ணாகிய சத்தியபாமாவை கிருஷ்ணருக்கு திருமணம் செய்துவைத்து அந்த மணியையும் அவருக்கே சீதனமாக வழங்கினார். கிருஷ்ணர் பாமாவை ஏற்றுக்கொண்டு மணியை சத்ராஜித்திடமே கொடுத்து விட்டார்.
சத்ராஜித்திடம் இருந்த மணியும் அவனிடம் தங்காமல் போனதோடு அவன் உயிருக்கே ஆபத்தாகவும் ஆனது எப்படி?


#ஸ்யமந்தகமணிஉபாக்யானம்
Part 6
By Rajineel Neelakant

கிருஷ்ணர் சத்யபாமாவை திருமணம் முடித்ததும் எழுந்த பிரச்சனை என்ன?

இதே சத்யபாமாவை திருமணம் செய்து கொடுப்பதாக மூன்று பேரிடம் சத்ராஜித் உறுதி கூறியிருந்தார். அவர்கள் அக்ரூரர், சததன்வா,1க்ருதவர்மா. அவர்கள் மூவருக்கும் சத்ராஜித்தின் மேல் கடும் கோபமும், கிருஷ்ணர்  மேல் பொறாமையும் உண்டாகியது.

சத்யபாமா தங்களுக்கு கிடையாது என்றதும் ,அந்த ஸ்யமந்தகமணியாவது தங்களுக்கு கிடைத்தே ஆகவேண்டும் என்று முடிவுசெய்தனர்.  சததன்வா சத்ராஜித் இடம் சென்று, “நீ எனக்கு அந்த ச்யமந்தகமணியைக் கொடுக்க வேண்டும். அதற்கு உன் உயிரே விலையாக இருந்தாலும் அதை எடுக்க நான் தயங்கமாட்டேன்”, என்று மிரட்டினான். .சத்ராஜித் ஏதோ சமாதானம் கூற முயன்றபோது ,சததன்வா ஆத்திரத்தில் அவனை கொன்று விட்டு மணியையும் எடுத்துச் சென்றுவிட்டான்.

இப்போது அந்த மணி சத்ராஜித்தையும் கொன்று, பிறருக்கும் சென்று சேராமல் அக்ரூரர் மற்றும் அவருடைய நண்பர்களிடையே சென்றது. அங்கும் அது அழிவையே ஏற்படுத்தியது.

அது ஏனென்று பார்ப்போம்.

சத்ராஜித் கொலையுண்ட பொழுது கிருஷ்ணர் துவாரகையில் இல்லை. அவர் அஸ்தினாபுரம் சென்றிருந்தார். அரக்கு மாளிகையில் பாண்டவர்கள் இறந்துவிட்டதாக தகவல் தெரிந்து திருதராஷ்டிரனை துக்கம் விசாரிக்க போயிருந்தார்.

க்ருஷ்ணர் திரும்பிவந்து சததன்வா அவர் மாமனாரைக்  கொலை செய்து மணியையும் திருடிச் சென்றது தெரிந்தால்  நிச்சயம் கிருஷ்ணர் சும்மா விட மாட்டார் என்று பயந்து , சததன்வா அந்த மணியை அக்ரூரரிடம் கொடுத்து அவரை ஊரைவிட்டு மணியுடன் எங்காவது சென்று விடும்படி கூறிவிட்டான்.

பாவம்   அக்ரூரர். அவர் பரம பாகவதரானாலும் ச்யமந்தகமணியின்  பிரபாவத்தால் மணியுடன் தனது இஷ்ட தெய்வமான க்ருஷ்ணரின் துவாரகையை விட்டு நேரே காசிக்கு சென்று விட்டார்.

கிருஷ்ணர் ஊரிலிருந்து வந்ததும் சத்தியபாமா நடந்ததைச் சொல்லி அழ,, கடும் கோபத்துடன் பலராமரையும் அழைத்துக்கொண்டு தேரிலேறி சததன்வாவை கண்டுபிடிக்க சென்றார். கிருஷ்ணர் வருவதை அறிந்து சததன்வா ஊரை விட்டு ஓட ஆரம்பித்தான். விடாமல் துரத்திச் சென்ற கிருஷ்ணன் நெடுதூரம் சென்றும் அவன் கையில் அகப்படவில்லை என்பதால் அம்பை எய்து அவனைக் கொன்றே விட்டார். பிறகு அவன் அருகில் சென்று மணியைத் தேடிய பொழுது  அவனிடம் அது இல்லை என்பது தெரிந்ததும் மிகுந்த ஏமாற்றமும் அநியாயமாக சததன்வா கொன்று விட்டோமே என்று பச்சாதாபமும் எழுந்தது.

இதற்குள் அங்கு ஓடி வந்த பலராமர் நடந்ததை அறிந்து கிருஷ்ணரை,“ ஹே கிருஷ்ணா எல்லோரும் உன்னை திருடன் என்றும் , கொலைகாரன் என்றும், நீதான் அந்த மணியை அபகரித்தவன் என்றும் ,சொன்னபொழுது நான் அதை நம்பாமல் உன்னை நம்பி உன்னோடு சேர்ந்து சததன்வாவை தேட வந்தது என்னுடைய தவறுதான். இப்பொழுதுதான் உன் நிஜ சொரூபம் தெரிகிறது. இனி உன் முகத்தில் நான் விழிக்கவே மாட்டேன்,” என்று சொல்லிவிட்டு கிருஷ்ணரை மேலே பேசவும் விடாமல் தேரை விட்டு இறங்கிச் சென்றுவிட்டார். 

மிகுந்த மனவருத்தத்தோடு கிருஷ்ணர் துவாரகை வந்து அக்ரூரரை தேடியதில் அவரும் அங்கு இல்லை என்றதும் ‘ஒன்றும் ஒன்றும் இரண்டு’ என்று கணக்குப்போட்டு அக்ரூரரிடம்தான் அந்த மணி இருக்க வேண்டும்.அவரை கண்டுபிடித்து கொண்டுவந்து துவாரகையில் சேர்த்தால்தான் தன் மீது அண்ணா போட்ட பழி நீங்கும் என்று தீர்மானித்தார்.

உடனே அக்ரூரரை  தேட தனது ஒற்றர்களை நாற்புறமும் அனுப்பினார். அப்பொழுது ஒரு ஒற்றன் திரும்பிவந்து ,”ஐயா காசி ராஜ்ஜியத்தில் தற்சமயம்  பஞ்சம் பசி தாகம் ஏதுமின்றி தேசம் சுபிட்சமாகவும் மக்கள் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்,” என்று தகவல் சொன்னதும் கிருஷ்ணருக்கு அக்ரூரர் மணியுடன் காசியில் தான் இருக்கிறார். அவர் மனதில் கல்மிஷம் இல்லை என்பதாலும் மற்றும் உடலளவிலும் எந்த சுத்த குறைவும் இல்லாததாலும் ஸ்யமந்தகமணி  தனது ஸ்வபாவமாகிய நாள் ஒன்றுக்கு எட்டு பாரம் தங்கமும் மற்ற செல்வங்களையும் அள்ளி கொடுத்துக்கொண்டு இருக்கிறது என்பதை புரிந்துகொண்டார்.

பின்னர் தகுந்த பண்டிதர்களை அனுப்பி அக்ரூரரை திரும்ப துவாரகைக்கு வருமாறும் அவரிடம் தனக்கு எந்த விரோதமும் இல்லை என்றும் வேண்டிக் கேட்டுக்கொண்டார்.

அக்ரூரரும் எப்போதடா கிருஷ்ணர் தன்னை திரும்ப அழைப்பார். எப்போது நாம் அவர் திருமுகத்தை பார்த்து நமது பாவங்களை போக்கிக் கொள்வோம், என்று காத்திருந்தாற்போல் உடனே கிளம்பி ச்யமந்தக மணியுடன் துவாரகை திரும்பினார். கிருஷ்ணரும் அவரை மரியாதையுடன் வரவேற்று உபசரித்து, அந்த ச்யமந்தகமணி அவரிடமே இருக்க வேண்டும்.அது கொடுக்கவேண்டிய நல்ல பலன்களை கிடைக்கச் செய்வது அவரால் மட்டுமே முடியும் என்று சொல்லிவிட்டார்.

மீண்டும் துவாரகையில் செழிப்பும் கிருஷ்ணரின் மனதில் நிம்மதியும் பிறந்தது.  பலராமனின் சந்தேகமும் நீங்கி கிருஷ்ணருடன் சௌகரியமும் சவுஜன்யமும்  ஏற்பட்டு பழையபடி அனைத்தும் நன்மையாகவே நடக்க ஆரம்பித்தது. 

இப்போது  அந்த நாலாம் பிறை கதை என்ன?

அந்த சமயம்  அங்கு வந்த நாரதரிடம் கிருஷ்ணர் தனக்கு ஏன் இத்தனை வீண்பழி மற்றும் மனசஞ்சலம் என்று கேட்டதும் நீ நான்காம் பிறை பார்த்தது தான் காரணம் என்றார்.

அது என்ன புதுகதை!?
By rajeswari neelakantan


#ஸ்யமந்தகமணிஉபாக்யானம்
Part 7
( final episode)
By Rajineel Neelakant

நாலாம் பிறையும் கணபதியும்

ஒரு முறை தனது மூஞ்சூர் வாகனத்தில் ஏறிக்கொண்டு வலம் வந்து கொண்டிருந்த விநாயகரைப் பார்த்து சந்திரன் கேலியாக சிரித்தாராம். அதைப்பார்த்த விநாயகருக்கு கடும் கோபம் வந்து சந்திரனை சபித்தார்.

என்னவென்று சபித்தார்?

“உன்னை பார்ப்பவர் அனைவரும் நாய் படாத பாடு படுவார்கள்.  அவர்கள் துன்பங்களுக்கெல்லாம் நீதான் காரணம் என்று உன்னையும் தூற்றுவார்கள்,” என்று சபித்தார்.

சாபம் தாங்காமல் சந்திரன் கடலுக்குச் சென்று மறைந்து கொண்டான். சந்திரன் இல்லாத உலகம் சோபை இழந்து, மூலிகைகள் வளராமல் ,உடல்நலம் எல்லோருக்கும்  குன்ற ஆரம்பித்தது. பிறகு தேவர்கள் எல்லோரும் சந்திரனுடன் சேர்ந்து பிள்ளையாரிடம் மன்னிப்பு வேண்ட அவரும் பெருந்தன்மையுடன் சந்திரனை மன்னித்து,” ஆனால் ஒரு நிபந்தனை ஒரே பிடியாக உன்னை  மன்னித்தால் உலகம் யாரையும் கேலி செய்ய தயங்காது. எனவே மாதத்தில் ஒரு நாள் அதாவது நான்காம் பிறை அன்று உன்னை பார்த்தால் அன்று அவர்கள் நாய் படாத பாடு படுவார்கள். வீண்பழி அபவாதம் அவர்களை வந்து சேரும்,”என்று சந்திரனை ஒரு நிபந்தனையுடன் மன்னித்து, அதற்கு அடையாளமாக அவரை தனது சிரசிலும் சூட்டிக்கொண்டார்.

இந்த நாலாம் பிறை பார்த்த பாவத்தை எப்படி பரிகாரம் கொள்வது அதற்கு இந்த பிள்ளையார் சதுர்த்தியன்று விநாயகர் பூஜை முடிந்தபின் சந்திரனுக்கு அர்க்கியம் விட்டு,” எனது வீண் பழிகள் ,அபவாதங்கள் எல்லாம் நீங்கவேண்டும்,” என்று வேண்டினால் நாலாம் பிறை பார்த்த பலன் நீங்கும். நாடும் வீடும் நலம் பெறும், என்று அந்த நிபந்தனைக்கு ஒரு பரிகாரமும் சொன்னார்.  அதனால்தான் இன்றும் பிள்ளையார் சதுர்த்தி பூஜை முடிவில் சந்திரனுக்கு அர்க்கியம் கொடுத்து வழிபடுகிறோம்.

கிருஷ்ணரும் நாரதர் சொன்ன முறையில் விநாயகரை வணங்கி சந்திரனுக்கு அர்க்யம் கொடுத்து தனது பழி நீங்க வேண்டிக் கொண்டாராம்.

இந்த ஸ்யமந்தகமணி கதையை கேட்பவர் சொல்பவர் அனைவருக்கும் வீண் பழிகள் அபவாதங்கள் நீங்கி  மகிழ்ச்சியாய்  இருப்பார்கள்  என்பது பெரியோர்  வாக்கு!

  வாழியவே  பல்லாண்டு காலம்  ச்யமந்தகமணி கதை கேட்ட  அனைவருமே!  வாழிய வாழிய வாழியவே ஆஆஆஆஆ. ஆஹாக ஆ. ஓஓஓஓஓஓ ஓஹோஹ ஓ!!

சரியாக விநாயகர் சதுர்த்தி அன்று முடிக்க வைத்த கணபதிக்கு அனந்த கோடி நமஸ்காரங்களுடன்
Rajeswari neelakantan

1 comment:

Unknown said...

மிக்க நன்றி....இந்த கதையை....அறிந்து கொள்ளும் வாய்ப்பளித்ததற்கு.