இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் கோவில்.
By Rajineel Neelakant
இன்றைக்கு சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு மத்துவ ஆச்சாரியார் ஸ்ரீவியாச ராஜ தீர்த்தர் சத்தியமங்கலம் வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைகிறார். சத்தியமங்கலம் அருகே சிறுமுகை என்ற இடத்திற்கு வந்ததும் அவருக்கு மேனி சிலிர்க்கிறது.அவர் கண்களுக்கு மட்டும் ஒரு பெரிய வானரத்தின் பாதச் சுவடுகள் தெரிகின்றன. மரங்களில் சக்தி வாய்ந்த ஒரு வானரத்தின் வால் அடித்து வெம்பிப்போன பட்டைகள் கண்ணுக்கு தெரிகிறது .
பல்லக்கு போகிகளை கூப்பிட்டு இங்கேயே என்னை இறக்கி விடுங்கள் என்று உத்தரவு இடுகிறார்.
குருகளே நாம் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. இந்த அடர்ந்த காட்டில் நாம் இறங்குவது எதற்காக? என்று கேட்பவர்களின் குரல் அவர் காதில் விழவே இல்லை.
பல்லக்கில் இருந்து இறங்கியவர் ஒரு மரத்தின் அடியில் போய் கண் மூடி உட்காருகிறார்.
அவருடைய ஞான திருஷ்டியில் திரேதா யுகத்தின் நிகழ்வுகள் அப்படியே காட்சியாக விரிகின்றன. ராவண சம்ஹாரம் முடிந்துவிட்டது. ராமர் பட்டாபிஷேகமும் ஆகிவிட்டது அதன் பிறகு பல விரும்ப தகாத நிகழ்ச்சிகளாக சீதையின் வனவாசம் சீதை பூமாதேவியின் மடியில் மறைவது போன்றவை நடந்து 16,000 ஆண்டுகள் இந்த பூமியை ராமராஜ்யமாக நடத்தி வந்த ராமரும் தன் அவதார நோக்கம் நிறைவேறியதால் மீண்டும் வைகுண்டம் திரும்ப வேண்டும் என்று காலன் தனிமையில் அவரை அழைக்கும் நேரமும் வந்தது.
.லவகுசர்களின் கையில் ஆட்சியை ஒப்படைத்து விட்டு சரயூ நதியில் இறங்கி மறைய முடிவு செய்த ராமருடன் அயோத்தி மக்களும் அவருடன் இராவண யுத்தத்தில் வீரமாக சண்டையிட்ட வானரக் கூட்டங்களும் சுக்ரீவன் போன்ற வானர அரசர்களும் மொத்தமாக அந்த சரயூ நதியில் இறங்கி அவரவர் உண்மை சொரூபத்தை அடைய துவங்கி ஆகிவிட்டது. ராமர் யாரெல்லாம் என்னோடு வைகுண்டம் வர பிரியப்படுகிறீர்களோ அனைவரையும் அழைக்கிறேன் என்று அறைகூவல் விட்டார் .ஆனால் அஞ்சனை மைந்தரான மாருதி மட்டும் எந்த தயக்கமும் இன்றி சற்றே தள்ளி தூரே நின்று ராமரின் அவதார காரியம் முற்றுப்பெற்றதையும் அவர் வைகுண்டம் ஏகுவதையும் பார்த்துக் கொண்டு கைகூப்பி அஞ்சலி பதமாக நின்றதும் ராமர் அவரிடம் சென்று மாருதி நீ என்னுடன் வர கிளம்பவில்லையா? என்று கேட்டதாகவும் ஐயனே வைகுண்டத்தில் ராம நாமம் உண்டோ? என்று கேட்டதாகவும் ராமர் உடனே ராமன் என்ற அவதாரம் பூமியில் முடிந்து விட்டது இனி நான் வைகுண்டம் சென்றால் என்னை பரவாசுதேவன் என்றும் வைகுண்ட வாசன் என்றும் தான் தெரிந்து கொள்ள முடியும் என்றதும் அப்படி என்றால் நான் இந்த பூமியிலேயே இருந்து கொண்டு எங்கெல்லாம் உங்கள் ராமாயணம் படிக்கப்படுகிறதோ எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் சென்று என் கண்களில் நீர் வழிய நான் அதைக் கேட்டுக் கொண்டு ராமநாமம் ஜெபித்தபடி இருந்து விடுவேன் என்றதும் ராமர் அவருக்கு நீ சிரஞ்சீவியாக இருப்பாய் எனவும் ராம நாமமும் ராமாயணமும் இந்த உலகத்தில் இருக்கும் வரை நீயும் இருப்பாய் என்று ஆசீர்வதித்து சென்றுவிட்டார்.
அன்று முதல் வீர மாருதி கம்பீர மாருதி பக்த ஆஞ்சநேயராக சஞ்சீவி மலை இருந்த இமாச்சலத்தில் இருந்து தான் சுற்றி வந்த கிஷ்கிந்தா வரை பின் சீதையை கண்ட இலங்கை வரையிலும் மரத்துக்கு மரம் கிளைக்கு கிளை தாவி தாவி எங்கெல்லாம் ராமாயணம் காதில் விழுகிறதோ அங்கெல்லாம் தன்னை மறந்து இருப்பதும் ராமரின் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை அசைபோடுவதுமாக இன்பமாக இன்றும் இருக்கிறார். இப்படி அலைந்து திரிந்ததாலேயோ என்னவோ அவருக்கு கொஞ்சம் இளைப்பாறினால் தேவலை என்று தோன்றியது. அப்பொழுது இந்த சத்தியமங்கலம் காட்டிற்கு வந்து தான் பெரிய உருவோடு பீமனுக்கு துவாபர யுகத்தில் பறித்துக் கொடுத்த சௌகந்திகா மலர் ஒரு கையிலும் சுதர்சன சக்கரம் பதித்த மற்றொரு கரமுமாக இந்த இடுகம்பாளையம் என்ற மலை சூழ்ந்த பிரதேசத்துக்கு வந்து லிங்க வடிவிலான ஒரு பாறையின் மேல் கால்களை நீட்டியபடி அமர்ந்து கொண்டிருக்கிறார்.
இவை அத்தனையும் ஸ்ரீவியாசராஜரின் மனக்கண் முன் அப்பொழுதுதான் நடப்பதை போல காட்சிகள் விரிந்தன.
ஆஹா இந்த பாறை தான் எத்தனை கொடுத்து வைத்தது! வானர வீரன் அனுமந்தராயன் மாருதி மைந்தன் சொல்லின் செல்வன் இந்த பாறையில் இளைப்பாறிய இடம் உன்னதமான தெய்வீகம் கொண்டது அல்லவோ! என்று தோன்றியதும் அதே இடத்தில் அந்தப் பாறையில் அஞ்சனை மைந்தனின் உருவத்தை செதுக்க சொல்லி சிறு கோவிலையும் கட்டி முடித்தார்.
கிருஷ்ண தேவராயரின் குலகுரு என்பதாலும் மத்துவ பரம்பரையின் முக்கியமான குரு என்பதாலும் அவர் வார்த்தைக்கு மறு வார்த்தை ஏது?
அற்புதமாக எழும்பியது அஞ்சனை மைந்தனின் கோவில் அவரும் அந்த ஆஞ்சநேயரை வணங்கி கண்களில் நீர் பெருக பிரியா விடை பெற்று இடுகம்பாளையத்திலிருந்து தனது பயணத்தை தொடர்ந்தார் .
அப்படிப்பட்ட உன்னதமான ஒரு கோவில்தான் இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் கோவில் .
இன்று அந்த கோவிலுக்கு செல்லும் பாக்கியம் எனக்கு கிடைத்தது கோபியில் இருந்து கோத்தகிரி செல்லும் வழியில் சிறுமுகை என்ற கிராமத்தில் இடது புறம் திரும்பினால் சிறிது தூரம் உள்ளடங்கி கிட்டத்தட்ட ஏழு எட்டு கிலோமீட்டர் சென்றால் அற்புதமான இந்த ஆலயம் நம் கண்களில் படுகிறது. யாரும் கவனிக்காமல் சிதைந்து இருக்குமோ என்று நினைத்துச் சென்ற எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.
மிக அழகாக பராமரிக்கப்பட்டிருந்த கோவில். சுத்தமான சுற்றுப்புறம். மிகப்பெரிய ஆலமரம். ஒரு துளி குப்பையும் கண்ணில் படாத பரிசுத்தம். அந்த வளாகத்திலேயே அங்கு பூஜை செய்யும் பட்டருக்கு குவாட்டர்ஸ் என்று அற்புதமாக ஒரு ஸ்தலம் இந்த ஆஞ்சநேயர் கோவில்.
மிக அழகாக கிட்டத்தட்ட ஐந்து அடிக்கு மேல், நடப்பதைப் போன்ற தோற்றத்துடன் முன்பே சொன்னபடி ஒரு கையில் சௌகந்திகா புஷ்பமும் இன்னொரு கையில் சுதர்சனம் முத்திரை பதிக்கப்பட்டும் வாலில் மணிக்கட்டி அற்புதமாக கண்களில் கருணை பொங்க இதயத்தில் ராம நாமம் ஒலிக்க வேண்டும் வரம் வேண்டுபவருக்கு கொடுக்கும் பாவனையில் நிற்பதை பார்த்தால் அங்கிருந்து கிளம்பவே மனம் வராது.
ராம அவதாரம் முடிந்த பின் ஆஞ்சநேயர் இங்கு வந்ததாலோ என்னவோ எப்பொழுதும் ஆஞ்சநேயர் உடன் அவர் வணங்கும் ராமர் சன்னதி இருப்பதை போல இங்கு ராமர் சன்னதியை காண முடியவில்லை. கோஷ்டங்களிலும் ஆஞ்சநேயரை சிலை உருவங்கள் தான் தென்படுகின்றன. கூப்பிய கரங்களுடன் ஆஞ்சநேயரின் விக்ரஹங்கள்தான். ஆனால் என்ன? எங்கும் நிறைந்த பரம்பொருள் இங்கு அனுமனின் இதயத்தில் குடி கொண்டிருக்கும் போது எப்போதும் அருள் மழைதான்.
தமிழ் மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்றும் மற்றும் அனுமத் ஜெயந்தி ராம நவமி போன்ற முக்கியமான தினங்களிலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து இங்கு கூடுவதாகவும் அனைவருக்கும் அன்னதானம் செய்விப்பதாகவும் அங்கிருந்த பட்டர் கூறினார். கேட்கவே மனதுக்கு இனிமையாக இருந்தது.
இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் கோவில் அதை தரிசனம் செய்பவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் ஒரு முறை சத்தியமங்கலம் வாருங்கள் அந்த ஆஞ்சநேயரை தரிசனம் செய்து ராமரின் அருளை பெறுங்கள்.
Rajeswari Neelakantan
No comments:
Post a Comment