Pages

Search This Blog

Thursday, May 18, 2023

யாருக்கு வைக்கிற ஆப்பு

என்ன அண்ணே இவ்வளவு மூச்சு இறக்க ஓடி வரீங்க என்ன ஆச்சு !!?

டேய் நமக்கு யாரோ வச்சுட்டாண்டா ஆப்பு,ஃ!

 என்னாது நமக்கு ஆப்பா! என்ன பேசுறீங்க இந்த ஏரியால  நாமதான் எல்லாருக்கும் ஆப்பு வைப்போம், நமக்கு ஆப்பா யாருண்ணே அந்த பெரிய மனுஷன்?
 
எவனோ ஒருத்தன் டா நிச்சயமா என் கையில மாட்டினா அவன் அத்தோட காலி .

சரிண்ணே மூடி மறைக்காம விஷயத்தை சொல்லுங்க.

நாம நம்ம ஏரியாவுல பண்ற அட்டகாசத்தை எவனோ போயி கவர்மெண்ட்ல சொல்லிட்டான்டா. நம்மள தேடிட்டு இருக்காங்க அரெஸ்ட் பண்றதுக்கு. இப்போ  கொஞ்ச நாளைக்கு நம்ம தலையை வெளியில காமிக்காம இருக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்.

 அண்ணே நாம உயிர் வாழுறதே இந்த ஏரியாவாலதா.. நாம ஒரு நாள் பயம் காட்டவில்லை என்றால் நம்மளை தூக்கி போட்டுட்டு வாங்க. நாம தலையை வெளியில காமிக்கலைன்னா அப்புறம் புவாக்கு என்னா செய்யறது?

 டூர் என்று ஸ்கூட்டர் சத்தம் கேட்கிறது..
  அண்ணே அண்ணே நம்ம அக்கா வராங்க அவங்களாண்ட போயி சொல்லுவோம். அவங்க நமக்கு தினமும்  அங்க இங்க அலைஞ்சு படி அளக்கறவங்க  அவங்க கொஞ்சம் படிச்சவங்க கூட..
  
 டேய் கவர்மெண்ட் ஆர்டர் வந்தா எந்த அக்காவும் எந்த சொக்காவும் எதுவும் செய்ய முடியாது ..ஆனா உனக்காக வரேன் .. டேய்..எல்லாரும் வாங்கடா.

அக்கா அக்கா அக்கா அக்கா 

இப்படி சூழ்ந்து நின்னு பேசினா நான் எப்படி டா  போவேன்? என்ன பிரச்சனை உங்களுக்கு வாய தொறந்து சொல்லுங்க!

 அக்கா அக்கா அக்கா... 
 
சரியா போச்சு நான் வீட்டுக்கு போறேன் எனக்கு வழி விடுங்க.

 அக்கா அக்கா..
 
அடடா சரி உங்களுக்கு ஏதோ பிரச்சனைன்னு புரியுது .அது என்னன்னு தெரியல நான் வீட்டுக்கு போயிட்டு  கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு அப்புறம் வரேன் அதுக்குள்ள யோசிச்சு வைங்க.

பாத்தியா உங்க அக்கா வீட்டுக்கு போய்ட்டாங்க . இந்தக் காலத்துல எவளையும் நம்ப கூடாது டா.. பேசாம ஒரு நாலு நாளைக்கு நம்ப தல மறவா இருக்கிறது பெட்டர்.

 ‌எல்லாரும் அவங்க அவங்களுக்கு தெரிஞ்ச சந்து பொந்துல போய் இருக்கிறத சாப்பிட்டு படுத்து கிடங்க. நான் கூப்பிட்டா ஒழிய யாரும் வெளியே வரக்கூடாது தெரியுதா..

ராத்திரி பத்து மணி தூரத்தில் பெரிய வேன் வரும் சத்தம் கேட்கிறது..

டேய் மன்னாரு கேக்குதா சத்தம் நம்ம கூட்டாளிங்க எல்லாம் எங்க இருக்காங்க?

 அண்ணே எல்லாரும் அதோ தெரியுது பாருங்க அந்த பள்ளத்தில் தான் உட்கார்ந்து இருக்காங்க.

 சரி சரி சத்தம் போட்டு காட்டிக் கொடுத்திராத   அதோ நிக்கிறான் பாரு அந்த சொட்டை தலையன் அவன மொள்ளமா பாரு.
   அவன் தான்டா நம்மள போட்டு கொடுத்தவன்.

இதோ வருதே வேனு அதுல தான் நம்மள அள்ளிப் போட்டுட்டு போக போறாங்க இனிமே இந்த வெளி உலகத்தை பார்க்கவே முடியாதுடா அங்க போய் நம்மள என்ன டார்ச்சர் பண்ணுவாங்களோ என்ன செய்வாங்களோ குழந்த குட்டிங்க எல்லாம் நாம இல்லாம..என்ன செய்யுமோ.. 

அண்ணே புலம்பாதீங்க அங்க பாருங்க அந்த அக்கா வந்திருக்காங்க அந்த ஆளோட ஏதோ பேசுறாங்க பாருங்க.

அட அந்த சொட்ட தலையன் கூட ஏதோ தலையை தலையை ஆட்டுறானே என்னடா இது வேன்ல இருக்கவங்க எல்லாம் நமக்கு பிஸ்கோத்து குடுக்குறாங்க கிட்ட போலாமா..வாயில போடலாமா ..

சார் இதுங்க எல்லாம் நம்ம ஏரியால இருக்கறதுனால தான் திருட்டு பயமில்லாமல் இருக்கோம் அவங்களுக்கு ஒரு தடுப்பூசி போட்டதோடு அவங்களை  விட்டுடுங்க நாங்க பார்த்துக்கிறோம் பேருக்கு வேணா ஒரு ஒன்னு ரெண்டு பேரை புடிச்சிட்டு போய் ப்ளூ கிராஸ் ல விட்டுடுங்க மத்தவங்க எல்லாம் இங்கே இருக்கட்டும் சார்.

மேடம் கார்ப்பரேஷனுக்கு தெரிஞ்சா எங்கள சத்தம் போடுவாங்க ஒரு நாலஞ்சு நாளைக்கு  எங்கேயாச்சும் கூட்டிட்டு போய் விட்டுட்டு திருப்பி கூட்டி கொண்டு வந்து விடுகிறோம் ..

சரிங்க சார் 

டேய் எல்லாரும் வாங்க..

 அக்கா அக்கா அக்கா அக்கா வள் வள் வள்...

அட அந்த சொட்டை தலையன் கூட பேசாம திரும்பி போறானே இருடா மவனே... ஒரு நாலு நாள் கழிச்சு திரும்பி  வருவேன் அப்ப நீ ரோட்ல நடக்கிறத நான் பார்த்துர்றேன்..

க்ர்ர்கர்ர்......


No comments: