மார்கழி மாதம் பரபரவென்று இயங்கும் மாதம். விடியற்காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு சுவாமி விளக்கேற்றி வாசலில் விளக்கு துளசி மாடத்திற்கு விளக்கு வைத்து திருப்பாவை திருவெம்பாவை சொல்லி அதன் பிறகு குளித்து மடியாக சமையலை முடித்து என் பூஜை அதை தவிர கணவரின் பஞ்சாயதன பூஜை அதன் பிறகு ராமாயண பாராயணம் என்று மூச்சு விட நேரமில்லாமல் அடுத்தடுத்து நம் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் காலை நேரம்.
பிறகு ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு மாலையில் மறுபடியும் நாராயணீயம் பகவத் கீதை என்று வகுப்புகளும் பாராயணங்களும் தொடரும் ஏழு மணிக்கு மேல் அக்கடா வென்று உட்கார நேரம் கிடைக்கும். இப்படி அவ்வை சண்முகி மாதிரி ஓடிக் கொண்டிருந்த அற்புதமான நாட்கள் திடீரென்று ஸ்தம்பித்து போனது.
நடுவில் இன்று திருவாதிரை அந்த பண்டிகையும் இல்லாமல் போனது. களியும் கூட்டும் நடராஜர் கண்களுக்கு எட்டாமல் போனது.
காலையில் எதற்கு எழுந்து கொள்கிறோம் என்பதே புரியாமல் எழுந்து குளித்தும் குளிக்காமலும் சமையலை முடித்து பிறகு 8 மணி தானா ஆகிறது என்று கடிகாரத்தை உற்றுப் பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் மொட்டை மாடியில் மேலும் கீழும் நடந்தால் மணி 9 . அதுக்கப்புறம் பத்து மணி ஆயிடுச்சு சாப்பிடலாமா என்று கேட்டபடி வரும் கணவருடன் சுட சுட சாப்பிட்டுவிட்டு மீண்டும் மொபைலில் மதியம் வரை மத்யமரையும் மற்ற சில மனிதர்களையும் படித்துவிட்டு கூகுள் நியூஸ் அந்த நியூஸ் இந்த நியூஸ் என்று பொழுதை ஓட்டிவிட்டு டிவியில் புரிந்தது புரியாதது அறிந்தது அறியாதது என்று பல நிகழ்ச்சிகளையும் சினிமாக்களையும் பார்த்துவிட்டு மணி பார்த்தால் 1 மணி ஆக இருக்கும்.லேசாக பசிக்கிறது என்று மீண்டும் கொஞ்சம் சாதம் தயிர் ஊறுகாய் என்று ஓட்டிவிட்டு படுத்து எழுந்து காபி குடித்து ராத்திரி டிஃபன்....
சாப்பாடு மட்டுமே வாழ்க்கை என்றானது. மணி எப்போதடா ஒன்பது ஆகும் என்று காத்திருந்து படுக்கையில் விழுந்தால் மனம் வெறுமையில் இன்று என்ன சாதித்தோம் என்று யோசித்து வராத தூக்கத்தை வரவழைத்து தூங்குகிறோம்.
நடுநடுவே மானே தேனே போல பேத்தியின் கதைகளும் பேரனின் வாய் மூலம் அன்றைய நிகழ்வுகளையும் கேட்டாலும் நமக்கே நமக்கு என்று இருக்கும் ரொட்டீனில் ஏதோ ஒரு பெரிய பள்ளம் விழுந்தது போல இருக்கிறது.
அப்பொழுதுதான் வெளிநாட்டில் இருக்கும் முதியோர்களின் நினைவுகள் கண்முன்னே எனக்கு தோன்றின. நான் அமெரிக்காவில் நான்கு வருடங்கள் இருந்த பொழுது அங்குள்ள வயதானவர்கள் யாரும் இல்லாமல் முதுமையின் தனிமையில் என்ன செய்வது என்று தெரியாமல் வெறுமே நிலை குத்திய கண்களோடு தங்கள் வாழ்வை கழிக்கும் அவலத்தை, நாட்களை எப்படி கழிப்பது என்று தெரியாமல் வெற்று வாழ்க்கை வாழும் நிலையை யோசிக்க தோன்றியது.
வாழ்ந்து முடித்த வாழ்க்கையின் நினைவுகளும் மறந்து இனி மரணத்தை மட்டுமே எதிர்நோக்கி காத்திருக்கும் அவலத்தையும் நினைக்கும் பொழுது அடடா நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள். பூஜை புனஸ்காரங்கள் என்று நம் முன்னோர்கள் நம் வயதான காலத்தை மன நிறைவோடு கழிக்க வழி செய்து வைத்திருக்கிறார்கள். வானப்பிரஸ்தம் என்று ஒன்றை ஏற்படுத்தி இறை சிந்தனையோடு கூடிய எளிய வாழ்க்கையை வரையறுத்து ஒவ்வொரு நாளையும் ஒரு குறிக்கோளுடன் வாழ்ந்து நாம் மரணத்தை மனநிறைவோடு ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை மெல்ல மெல்ல நம் மனதில் பதிக்கும் வாழ்க்கை முறையை எத்தனை தரம் போற்றினாலும் தீராது.
கர்ம வினைகளுக்கு ஏற்ப நமக்கு ஜென்மங்கள் உண்டு என்ற நம்பிக்கையால் இந்த ஜென்மாவில் நம் முதுமை காலத்தையாவது இறைவன் அருளோடு இறை சிந்தனையோடு கழித்தால் வரும் ஜென்மாக்களில் நமக்கு அதன் பலன் உண்டு என்ற நம்பிக்கையால் வயசாயுடுத்து இதையெல்லாம் படித்து நான் என்ன செய்யப் போறேன் என்று சலித்துக்கொள்ள வழி இல்லாமல் செய்த நமது சனாதன நம்பிக்கை எப்படிப்பட்ட ஒரு பூஸ்டர் நம் வாழ்க்கைக்கு என்று நினைத்தால் பெருமையாக இருக்கிறது. பண்டிகைகளும் திருவிழாக்களும் ஒன்றும் இல்லாவிட்டால் கிருத்திகையும் சஷ்டியும் ஏகாதசியும் நம்மை மனதை வேறு எதிலும் அலையவிடாமல் வைக்கிறதே..
இதோ நான்கு நாட்கள் ஓடி விட்டது. சும்மா இருக்க பிடிக்காமல் ஞானபரமாக தானே இந்த புத்தகங்கள் என்று திருவாசகத்தையும் கந்தர் அனுபூதியையும் மனம் உருக பாட ஆரம்பித்து விட்டேன். முதுமை ஒரு வரம். அது இந்த பாரத நாட்டின் ஸ்பெஷாலிட்டி என்று நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது.
இந்த அற்புதமான பாரத திருநாட்டில் பிறந்தது மட்டுமல்ல இங்கேயே வாழும் வாய்ப்பையும் அளித்த இறைவா உனக்கு மிக்க நன்றி.
பி. கு.
இந்த பத்து நாள் தீண்டலில் எனக்கு கிடைத்த ஒரே நல்ல விஷயம் இந்த ஞானம் தான். என் உறவுக்காரர்கள் அனைவரும் இனி சாகா வரம் பெற்றவர்களாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் 😄
No comments:
Post a Comment