அப்போது ஒரு நாள் மதியம் ஒரு மணி இருக்கும். என் மாமியார் வேலைகள் எல்லாம் முடித்து சாப்பாடும் ஆகிவிட்டது .வாசலில் அமர்ந்து கொண்டு ஏதோ கல்கியோ ஆனந்த விகடனோ ஏதோ ஒன்று படித்துக் கொண்டிருந்தார் .
அவர் எப்பொழுதும் புத்தகமும் கையுமாகத்தான் இருப்பார். கிடு கிடு என்ற வேலையை முடித்தாகி விட்டு நறுவிசாக காரியங்கள் செய்த பிறகு புத்தகம் தான் அவரது உலகம்.
அப்படியே அமர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது,, வாசலில் எதிர் பிளாட்பார்மில் மூன்று பேர் இங்கே போவதும் திரும்பியும் அங்கே இருந்து தெருவின் இந்த முனைக்கு வருவதும் என்று ஒரு ரெண்டு மூணு தரம் அலைந்து கொண்டிருப்பதை பார்த்ததில் அவருக்கு அந்த மூன்று பேரும் யார் என்பது புரிந்து விட்டது.
அவர்கள் வேறு யாரும் இல்லை என் சித்தப்பாவான ஜா.ரா. சுந்தரேசன் மற்றும் குமுதம் ஆசிரியர் குழுவில் இருந்த ரா.கி.ரங்கராஜன் புனிதன் அவர்கள் மூவரும் தான். எங்கேயோ தேடிக் கொண்டே போவதும் வருவதுமாக இருப்பதைப் பார்த்துவிட்டு," மாமா இங்க வாங்கோ! நீங்க தேடற வீடு இங்க தான் !!" என்று கைதட்டி அழைத்தார். உடனே அவர்கள் சந்தோஷ பூரிப்பில், "அப்பாடா! ராஜி வீடு இங்க தான் எங்கயோ இருக்குன்னு தெரியும். அதுதான் ரொம்ப நேரமா தேடிக்கொண்டிருந்தோம். எங்களை கரெக்டாக கண்டுபிடித்து விட்டீர்களே மாமி" என்ற படியே உள்ளே வந்தார்கள்.
நல்ல வெயில். அவர்கள் மூன்று பேர் முகத்திலும் களைப்பு அப்பட்டமாக தெரிந்தது. உடனே எல்லாரும் கைகால் அலம்பிக் கொண்டு என்று சாப்பிட வாங்கோ என்றாரே பார்க்கணும்.. !
அவர்கள் முகத்தில் சந்தோஷம் தாண்டவமாடியது. பாவம் நல்ல பசியா இருப்பேள் .. கொஞ்சம் ஆசுவாச படுத்திக்கோங்கோ. என்று பேனை ஆன் செய்துவிட்டு இதோ வரேன்னு என்று சொல்லி சமையல் அறைக்குள் நுழைந்தார் .
உள்ளே பாத்திரம் எல்லாம் அலம்பி தேய்க்க போட்டு ஆகிவிட்டது என்பது எனக்கு நன்றாக தெரியும் .
நான் ஆச்சரியத்துடன் என் மாமியாரை பார்க்க,," அவர் சித்த உள்ளவா ராஜி" என்றபடி என்னை உள்ளே அழைத்து" கடகடவென்று அந்த உருளைக்கிழங்கு நாலாக வெட்டு "என்று எனக்கு ஆர்டர் போட்டுவிட்டுகிடு கிடுவென்று ஒரு கேசில் குக்கர் சாதம் பருப்போடு இன்னொரு பக்கம் உருளைக்கிழங்கை வேக வைத்து பிறகு ஒரு பாத்திரத்தில் தக்காளியை நிறைய போட்டு ரசம் ஒரு பக்கம் . இன்னொரு பக்கம் ஒரு கைப்பிடி தேங்காய் துருவி அள்ளிப்போட்டு சாம்பார் ,உருளைக்கிழங்கு கறி என்று கம கம என்று வாசனையுடன் அரை மணி நேரத்திற்குள் அருமையான சமையல் ரெடி.( அவருடைய அதிரடி சமையல் உலக பிரசித்தம். ஒருமுறை அதை என் அம்மாவிடம் ஸ்லாகித்து சொல்லியதில் என் அம்மா சரிடி மா எனக்கு அவ்வளவு சமத்து போறாது என்று முகவாக்கட்டையில் இடித்துக் கொண்டு போனது வேற கதை!)
எல்லோருக்கும் வாழை இலை போட்டு "எல்லாரும் வாங்கோ" என்றதும் துளி கூட பிகு செய்யாமல் இலையில் முன் அமர்ந்தார்கள். முதல் இலைக்கு பால் பாயசமும் வந்து ஒரு கரண்டி விழுந்தது.சுட சுட சாதமும் உருளைக்கிழங்கு கறியும் தீர தீர சாதமும் இலையில் விழ ஐயோ மாமி போறும் போறும் என்று கதறும் அளவுக்கு ரசம் வரை முடிந்ததும் எல்லோரும் இன்னொரு ரவுண்டு பாயசம் போட்டுக்கோங்கோ முதல் இலைக்கு போட்டதோடு சரி என்றார்.
இத்தனையும் ஆச்சரியத்தோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அந்த நிமிடம் திக் என்றது. ஏனென்றால் முதல் இலைக்கு போடுவதற்கு மட்டும்தான் ஒரு சின்ன டபராவை குழைந்த சாதத்தையும் பாலையும் சக்கரையும் போட்டு கலந்து வைத்தார். அதற்கு பிறகு பாயசம் அங்கு ஒரு சொட்டு கூட இல்ல. என்ன தைரியமாக பாயசம் விட்டுக்கோங்கோ என்று சொல்கிறார் என்று நான் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தபோது மூவரும் ஒரே குரலில் ஐயோ மாமி இனி ஒரு சொட்டு கூட எங்களால எதுவும் சாப்பிட முடியாது கொஞ்சம் போல சாதம் போட்டு மோர் மட்டும் போதும் என்று வேண்டி கேட்டுக்கொண்டார்கள். அதெல்லாம் கிடையாது..கொஞ்சம் பாயசம் எடுத்துண்டு வா ராஜேஸ்வரி என்று அவர் என்னை வேறு ஏவினார்..
ஏதோ நல்ல காலம் என் திருதிரு விழியை மறைத்துக் கொண்டு விட்டேன் . பிறகு இருந்த தயிரை மோராக மாற்றி ( ஃபிரிட்ஜ் இல்லாத காலம் அது.) இலையில் விட்டு திரும்பவும் ஒரு ரவுண்டு பாயசம் சந்தேகத்துக்கு சாதம் என்று அவர்களை கேட்டு திண்டாட வைத்து... இல்லாத பாயசத்தை பொய்யாக உபசரித்து அடித்து சொன்னது சாப்பிடுபவரின் உள்ளத்தை நிறைத்தால் அந்த பொய்யில் ஏது தவறு...
இப்பொழுது நினைத்தாலும்...
என் மாமியாரின் அந்த குணம் கடைசி வரை நான் ஆச்சரியப்பட்டது.முடிந்த அளவு நான் அதை பழக்கத்தில் கொண்டுவர நினைத்தாலும் அவர் அளவிற்கு செய்தேனா என்பது சந்தேகமே.
இதே போல வெந்நீர் மட்டுமே குடிக்கும் எங்கள் புக்காத்து பெரியப்பாவிற்கு வெந்நீர் தான் என்று அடித்துச் சொல்லி பானையில் இருந்து தண்ணீர் கொடுப்பார். அவரும் சாரதா இது வெந்நீரில்லை என்று உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் ஆனா உன் நல்ல மனசுக்கு என்னை இந்த பான தண்ணி ஒன்னும் செய்யாது என்று வாங்கி குடித்தபடியே சிரிப்பார்.
இப்படி பல புரை தீர்த்து நன்மை பயக்கும் பொய்களை அவர் வாழ்நாளில் சொல்லி கொண்டு இருந்தார். அதனால் சந்தோஷப்பட்ட உள்ளங்கள் இன்னும் அவரை வாழ்த்தி கொண்டு தான் இருக்கின்றன.
No comments:
Post a Comment