Pages

Search This Blog

Saturday, August 05, 2023

காஞ்சி ஜைன காஞ்சி

 போவோமா வேற காஞ்சி!

By 

Rajineel Neelakant


காஞ்சீபுரம் என்றதும் பட்டு ஞாபகம் வரும். அப்புறம் காமாக்ஷிஏகாம்பரேஸ்வரர் வரதராஜர் ...இன்னும் சில பேருக்கு பழைய சரவணபவன் ஞாபகம் வரலாம். ஆனால் நாங்கள் போன ஞாயிறன்று காஞ்சிக்கு கிளம்பியபோது இதை எல்லாம் தாண்டி அமைதியான வேறு ஒரு காஞ்சீயைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தோம். 


இருக்கவே இருக்கிறது கூகுள் மாமி. வலைவீசி தேடிய போது கண்ணில் பட்டது த்ரைலோக்யநாதர் கோயில். முதலில் பேரைப்பார்த்ததும் ஏதோ சிவன் கோயில் என்று நினைத்தோம். மேலே படிக்கப் படிக்க ஆஹா இது சமணர்களின் தீர்த்தங்கரர்களில் ஒருவருக்கான கோவில் என்பது புரிந்தது. அந்த பேஜில் இணைக்கப்பட்டிருந்த ஃபோட்டோக்கள் எங்களை வா வா என் அழைத்தன. மருமகள் கல்கி ரசிகை. அவள் சிவகாமியின் சபதம் ஆடியோ புக்கை கேட்டு முடித்த சமயம். எனவே இதுதான் நாம் போக வேண்டிய இடம் என்று ஒரு மனதாக முடிவானது. ( சௌகர்யமாக புத்த சமண வித்தியாசங்கள் ஒதுக்கப்பட்டன! ) 


அப்புறம் என்ன காலை்எட்டு மணிக்கு கிளம்பனும்னு பந்தா ப்ளான் எல்லாம் போட்டு ஒரு வழியாக ஒன்பது மணிக்கு கிளம்பி அவ்வளவாக ட்ராஃபிக் இல்லாத ஹைவேயில் பயணித்து கொஞ்சம் தூரம் அழகான கிராமங்கள் ( அவைகள் ஏதோ 1940லேயே உறைந்து போனமாதிரி இருந்தன ) வழியே புகுந்து புறப்பட்டு கூகுள் மேப்காரரின் வழிகாட்டுதலில் அந்தக் கோவில் வாசலில் காரை நிறுத்தவும் கோயில் பட்டர் நடைசார்த்தி விட்டு சாவியை இடுப்பில் செருகிக் கொண்டு திரும்பவும் சரியாக இருந்தது. 


இதுக்குத்தான் எட்டு மணிக்குக் கிளம்பணும் கிளம்பணும் என்று முட்டிண்டேன் கேட்டாத்தானே என்று பொதுவாக ஒரு முணுமுணுப்பை நான் உதிர்த்தது அவர் காதில் விழுந்ததோ என்னவோ “ வாங்கோ வாங்கோ நல்ல வேளை சரியான நேரம்தான் “ என்றபடி மீண்டும் கதவைத்திறந்தார்.  


அட அட என்ன ஒரு அமைதி சிந்தும் கருவறை. எங்கும் குரு கடாட்சம்தான். மொத்தம் ஒன்பது தீர்த்தங்கரர்கள் சந்நிதிகள் இருக்கின்றன. அவை அனைத்துமே கண்ணாடி கதவுகளால் மூடப் பட்டிருக்கின்றன. சுதை சிற்பங்கள். எனவே அர்ச்சனை அபிஷேகங்கள் கிடையாது. எனவே த்ரைலோக்கயநாதரை ஒரு சிறிய ஒரடி மார்பிள் சிலையாக்கி கருவறைக்கு வெளியே வைத்து பூஜை அபிஷேகமெல்லாம் அதற்குத்தான்.   


ஆளரவமே அற்ற சூழல். நின்று எரியும் முத்துச்சுடர் போன்ற குத்து விளக்குகள். பட்டர் ஆரத்தி காண்பித்ததும் என் மனத்தில் அந்த இடம் பல நூறு ஆண்டுகள் பின்னோக்கி போய் விட்டது. 


இதோ இதே போன்ற ஒரு அழகிய அமைதியான காஞ்சியில்தானே ஆயனசிற்பி தனது உளியின் கைவண்ணத்தில் அற்புதச் சிலைகளை வடித்திருப்பார்?. அவருக்கெனவே ப்ரம்மா ப்ரத்யேகமாக வடித்த உயிருள்ள சிலையான அவர் மகள் சிவகாமி இதோ இந்த மண்டபத்தில்தான் ஜல்ஜல் என நடனமாடி நரசிம்ம பல்லவனின் நெஞ்சை அசைத்திருப்பாள்? 


இதோ இந்த ஆச்சர்யமான மேல் விதானத்தில் அற்புதமாக எழுதப்பட்டிருக்கும் அழகிய வண்ணங்களில் மிளிரும் ஓவியங்களும் யந்திரங்களும் பலபல அரசர்களின் ஊர்வலங்களும்தானே மகேந்திரபல்லவன் நாகநந்தியிடம் அறிய விரும்பிய அதிசய வண்ணக்கலவையாக இருந்திருக்கும்? 


இல்லை இல்லை ஒரு வேளை ஆதித்த கரிகாலன் இங்குதான் சுந்தர சோழருக்காக அரண்மனைக் கட்ட நினைத்திருப்பாரோ? 


அதோ அங்கேதான் பார்த்திபன் கண்ட கனவு பலிக்க மகேந்திரபல்லவர் அவனை கடல் கடந்து அனுப்ப முடிவெடுத்திருப்பாரோ?


அம்மா அம்மா... என்ன ஆச்சு? மலங்க மலங்க முழிக்கறே? சரியாப் போச்சு பட்டர் நடையைச்சாத்த நேரமாச்சுங்கறார். “ என்று என்மகன் என்னை உலுக்கியதும்தான் 21 வது நூற்றாண்டுக்கு வந்தேன். 


சமணர் கோயில் என்றாலும் மகாவிஷ்ணுவும் மகாலக்ஷ்மியும் உற்சவ மூர்த்திகளாய் ப்ராகாரத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். கால பைரவர் க்ஷேத்ர பாலகராக தனது நாயுடன் சந்நிதி கொண்டிருக்கிறார். கோயிலுமே திராவிட அமைப்பில்தான் கட்டப்பட்டு இருக்கறது. பதிமூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்கிறது அங்கிருக்கும் போர்ட். எழுநூறு வருடங்களானாலும் புதுக்கருக்கு அழியாமல் இருக்கின்றன விதான ஓவியங்களின் வண்ணங்கள். 


ஆர்க்கியாலஜி அமைப்பின் கீழ் உள்ளது இந்தக்கோயில். க்ரந்தலிபியிலும் தெலுங்கு கலந்த தமிழிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் சுவர்கள் முழுவதும். எந்த மகராசன் என்னென்ன நிவந்தங்கள் அளித்தானோ இந்த கோயிலுக்கும் சுத்துப்பட்டி கிராமங்களுக்கும்?! 


சித்திரை ஒன்றாம் தேதி உற்சவம். அன்று சின்ன தேர் ஊர்வலம் உண்டு. மற்றபடி பெரிய உற்சவங்கள் இல்லை. சென்னையிலிருந்து ஜெயின் குடும்பங்கள் அடிக்கடி வருகிறார்கள். உள்ளூரில் தினமும் ஒரு பத்து இருபது பேர் ரெகுலராக வருகிறார்களாம். 


மெல்ல வெளியே வந்தால் ஆஹா குட்டியாக அழகாக சின்னக்குழந்தைகள் வரையும் படத்தைப்போன்றே நிஜத்தில் இருக்கும் ஒரு ஓட்டு வீடு. அச்சோ கொள்ளை அழகு. அந்த வீட்டில் போன ஆறுமாதம் முன்பு வரை ஒரு பாட்டி இருந்தாளாம். இப்போது அவர் காலமாகிவிட்டதால் வீடு பூட்டி இருக்கிறது. (அந்த பாட்டியைப் பற்றி வேறு ஒருவரும் நெட்டில் குறிப்பிட்டிருக்கிறார் நான் அவரைப் பார்க்க ஆசைப்பட்டேன்)!வெளிநாடாக இருந்தால் அந்த இடத்தை காட்சிப்பொருளாக்கி டாலர்கணக்கில் கொள்ளை அடித்திருப்பார்கள்.நாமும் ஆ. என்று வாயைப்பிளந்து கொண்டு பார்த்துவிட்டு இந்தியா வந்து பீத்திக்கொண்டிருப்போம். 


இந்தக் கோயிலின் பட்டர் பெயர் உதயணன். (எனக்கு உடனேஉதயணன் வாசவதத்தை கதை ஞாபகம் வந்தது). நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு தனக்குத் தெரிந்தவரை விவரமாக பதில் சொன்னார். அவருக்கு கோயிலுக்கு எதிர்ப்புறமே வீடு கொடுத்திருக்கிறார்கள். அவர் மனைவியும் கல கல டைப்தான். நேரம் போனதே தெரியவில்லை. 


மணி பன்னிரண்டு ஆகிவிட்டது. நிஜமாகவே கிளம்ப மனமே இல்லாமல் அதே சமயம் மனம் நிறைய சரித்திர நினைவுகளோடு திரும்பினோம். 


PS:அங்கிருந்து எட்டு நிமிட தூரத்தில்தான் கைலாசநாதர் கோயில் அது ஒரு சரித்திர, கலைக் கடல். அதை பற்றி எழுதினால் ஒரு நாவலாகிவிடும். சும்மா சேம்பிளுக்கு சில ஃபோட்டோ மட்டும் கீழே பாருங்கள். 

By Rajeswari Neelakantan

09/02/2021

No comments: